சுந்தர் பிச்சையை விட அதிக சம்பளம் வாங்கும் இந்தியர்.. டெஸ்லாவின் CFO.. யார் இந்த வைபவ் தனேஜா?
கடந்த 2024ஆம் ஆண்டு, சுந்தர் பிச்சையை காட்டிலும் 10 மடங்கு அதிக சம்பளம் வாங்கி இருக்கிறார் இந்திய வம்சாவளியான வைபவ் தனேஜா.

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி வைபவ் தனேஜாவின் சம்பளம் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா ஆகியோரை காட்டிலும் அதிக சம்பளத்தை பெற்று வருகிறார். கடந்த 2024ஆம் ஆண்டு, சுந்தர் பிச்சையை காட்டிலும் 10 மடங்கு அதிக சம்பளம் வாங்கி இருக்கிறார் இந்திய வம்சாவளியான வைபவ் தனேஜா.
யார் இந்த வைபவ் தனேஜா?
டெல்லி பல்கலைக்கழகத்தில் தனது கல்விப் பயணத்தைத் தொடங்கிய வைபவ் தனேஜா, 1999ஆம் ஆண்டு வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், இந்தியாவில் பட்டயக் கணக்காளராக (Chartered Accountant) ஆகியுள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு, அமெரிக்காவில் சான்றளிக்கப்பட்ட பொதுக் கணக்காளராகவும் (CPA) ஆகியுள்ளார். இந்தியாவிலும் அமெரிக்காவிலும் தணிக்கை ஆலோசகராக 17 ஆண்டுகள் பணியாற்றினார். இறுதியில், 2016ஆம் ஆண்டு, சோலார்சிட்டி நிறுவனத்தில் இணைந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு, சோலார்சிட்டி டெஸ்லாவுடன் இணைந்த பிறகு, அவரது வாழ்க்கை உச்சம் தொட்டது.
டெஸ்லா நிறுவனத்தில் அவர் விரைவாக பதவி உயர்வை பெற்றார். உதவி நிறுவனக் கட்டுப்பாட்டாளராக இருந்து, 2018 இல் நிறுவனக் கட்டுப்பாட்டாளராகவும், 2019 இல் தலைமைக் கணக்கியல் அதிகாரியாகவும், இறுதியாக 2023ஆம் ஆண்டு, தலைமை நிதி அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.
அசாதாரண வெற்றிக்கு காரணம் என்ன?
தற்போது, அவர் டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் மற்றும் எனர்ஜியின் இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார். இந்திய சந்தைக்கான டெஸ்லாவின் உத்தியை வடிவமைப்பதில் இவர் முக்கிய பங்கு வகிக்கிறார். இவரின் சம்பளம் பெரும்பாலும் டெஸ்லாவின் பங்குகள் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது.
தலைமை நிதி அதிகாரியாக பதவி உயர்வு பெறும்போது, டெஸ்லா பங்குகளின் விலை 250 அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஆனால், பின்னர் 342 அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது. இது, அவரது சம்பளத்தை பெரிய அளவில் உயர்த்தியது.
இதன் மூலம், கடந்தாண்டு, சத்யா நாதெல்லா மற்றும் சுந்தர் பிச்சையை காட்டிலும் அதிக சம்பளம் வாங்கும் இந்திய வம்சாவளியாக உருவெடுத்திருக்கிறார் வைபவ் தனேஜா. சத்யா நாதெல்லாவின் ஆண்டு வருமானம் 79.1 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. சுந்தர் பிச்சையின் ஆண்டு வருமான 10.7 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. மேலும்,2020ஆம் ஆண்டு, நிகோலாவின் முந்தைய CFO சம்பள சாதனையான 86 மில்லியன் அமெரிக்க டாலர்களை முறியடித்தது.
பெரிய சம்பளம் வாங்கினாலும் வைபவ் தனேஜா தனது ஆடம்பரத்திற்காக அல்லாமல் மாறாக தலைமைத்துவத்திற்காக அறியப்படுகிறார். 20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன், திறமை, அர்ப்பணிப்பு மற்றும் உலகளாவிய தகவமைப்புத் திறன் ஆகியவை உலக அரங்கில் இவரது அசாதாரண வெற்றிக்கு வழிவகுத்துள்ளது. இதனால், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு இவர் முன்மாதிரியாக மாறியுள்ளார்.





















