இலங்கை பொருளாதார நெருக்கடி:
இலங்கையின் வரலாற்றில் இல்லாத அளவில் அங்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியால் மக்களின் வாழ்வாதாரம் முழுவதும் சிதைந்து போயுள்ளது. இந்த சிக்கலில் இருந்து வெளிவருவதற்கு அந்நாட்டு அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் தீர்வு கிடைத்தபாடில்லை. உலக நாடுகள் ஓரளவு உதவினாலும் பொருளாதார நெருக்கடி என்பது முழுவதுமாக சகல துறைகளிலும் பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அடித்தட்டு மக்கள் முதல் மேல் வர்க்கத்தினர் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் .
அமெரிக்கா உதவி:
இந்நிலையில் இலங்கைக்கு உதவுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருக்கிறார். G7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இதனைத் தெரிவித்துள்ளார். சுமார் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அமெரிக்கா வழங்குவதாக அவர் கூறியுள்ளார். இதன் மூலம் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை சிறார்களுக்கு உணவு கிடைக்கும் என கூறப்படுகிறது. இலங்கையில் உணவு பாதுகாப்பினை பலப்படுத்தும் வகையில் மேலதிக உதவியாக இந்த 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படுவதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மிகவும் தேவையுடையோருக்கு இந்த நிதியில் இருந்து உதவிகள் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
ஒற்றுமை இல்லை:
இலங்கையின் நட்பு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் சில இலங்கைக்கு உதவிகளைச் செய்து வருகின்றன .
இவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உதவியாக இருக்குமே தவிர, நிரந்தர தீர்வாக இருக்குமா என்பதே அனைவரது கேள்வியாகவும் இருக்கிறது. நாட்டில் நிலவும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டியவர்கள் அதிபரும் தற்போது உள்ள பிரதமருமே. ஆளுங்கட்சி ,எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து திடமான ஒரு முடிவெடுத்து இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அடிப்படை பிரச்சனையை சரி செய்ய முனைந்தால் மட்டுமே ஒரு உறுதியான முடிவு கிடைக்கும். அங்கு ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையில் ஒற்றுமை இல்லை, அரசியல்வாதிகளுக்கும், மக்களுக்கு இடையேயும் ஒற்றுமை இல்லை. இவ்வாறு நான்கு வழி பாதையில் அரசியல்வாதிகள் செல்லும் போது நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த பெரிய அளவிலான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு ஒரு தீர்வை வழங்குவது யார்?. மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு ஜனநாயக நாட்டில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பொருளாதாரப் பிரச்சனையை சரி செய்வது யார் என்ற கேள்வி எழும்பியுள்ளது.
பொதுமக்கள் கேள்வி:
ஆகவே மக்கள் இந்த பிரச்சனையிலிருந்து வெளிவர வேண்டுமானால் முழு அரசும் கலைக்கப்பட்டு தேர்தல் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது. இருந்த போதும் இலங்கை அரசு நிதி உதவிகள் இல்லை, பொருளாதாரத் தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு ,மின் வசதி இல்லை என கூறி வரும் நிலையில், அங்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அனுமதித்திருக்கிறார்கள், அதேபோல அங்கு கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறுகிறது, அதேபோல் விமான நிலைய திறப்பும் நடைபெற இருக்கிறது. இவ்வாறான ஒரு சூழலில் இவற்றுக்கெல்லாம் அரசுக்கு எங்கிருந்து நிதி வருகிறது ? என பொதுமக்கள் கேள்விகளை எழுப்ப தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் மக்களின் பொருளாதாரத் தட்டுப்பாடை சரிசெய்ய ஏன் அரசு முனைப்பு காட்ட வில்லை என்பதும் அங்குள்ள மக்களின் இன்னொரு தரப்பு கேள்வியாக இருக்கிறது.
இலங்கை அரசு குறிப்பிட்ட சில பொழுதுபோக்கு விடயங்களில் முதலீடு செய்யும் பணமானது பொருளாதார பிரச்சனையில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உலக நாடுகள் வழங்கும் பணத்திலிருந்து தானோ என எண்ணத் தோன்றுகிறது. இவ்வாறான செயற்பாடுகளை இலங்கையின் எதிர்க்கட்சிகளும், எதிர்க்கட்சித் தலைவர்களும், சுட்டிக்காட்டி நாள்தோறும் அரசுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர். இருந்தபோதிலும் இவற்றுக்கான பதிலும் இன்னும் தெளிவாக வெளிவரவில்லை. இந்நிலையில் அமெரிக்கா இலங்கைக்கு 32 மில்லியன் டாலர்களை அறிவித்த நிலையில் தற்போது சீனாவும் இலங்கைக்கு உணவு பொருட்களை வழங்கி உதவி செய்திருக்கிறது.
அரசியல் விமர்சர்கள்:
தற்போது இலங்கைக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் வழங்கி வரும் உதவிகள் குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு மட்டுமே போதுமானதாகவே இருக்கிறது. இந்நிலையில் ,அனைத்து பொருளாதார ரீதியான உதவிகளும் இலங்கையின் எல்லா பகுதிகளிலும் உள்ள மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதில் உலக நாடுகள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.
உதவிகள் சரியானவர்களுக்கு சென்றடைகிறதா:
இந்தியா உள்ளிட்ட அயல் நட்பு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல உதவிகளை செய்து வருகின்றன. ஆனால் எரிபொருள் , உணவு மற்றும் மருந்து ரீதியிலான இந்த உதவிகள் உரிய மக்களை சென்றடைகின்றனவா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இலங்கையில் நிதி பதுக்கல், எரிபொருள் பதுக்கல் மற்றும் உணவு மளிகை பொருட்கள் பதுக்கல் என பல்வேறு சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருவதையும் செய்திகள் மூலமாகவும் அறியமுடிகிறது. எனவே தற்போதைய சூழ்நிலையை சமாளிக்கும் அளவுக்கு உலக நாடுகளிடம் இருந்து இலங்கைக்கு வழங்கப்படும் நிதி உதவிகள், பொருளாதார உதவிகள் உரிய முறையில் பாதிக்கப்பட்டிருக்கும், வறுமைக் கோட்டின் கீழ் இருக்கும் மக்களுக்கு, சென்றடைய வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
கட்டாயத்தில் இலங்கை தலைவர்கள்:
முன்னதாக ராஜபக்ச குடும்பத்தினரின் ஆட்சியில் தங்களின் பூர்வீக ஊரான ஹம்பாந்தோட்டை, காலி ,மாத்தறை பகுதியில் அபிவிருத்தி என்ற பெயரில் ,பெரிய பொருட் செலவில் பணம் பயன்படுத்தப்பட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். துறைமுகம், விமான நிலையம், விளையாட்டு மைதானம், களியாட்ட விடுதிகள் என இவற்றின் மீது மக்களின் பணத்தை பயன்படுத்தி, அபிவிருத்தி என்ற பெயரில் நாட்டின் வளத்தை சூறையாடி விட்டதாக இலங்கை மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் மீண்டும் மக்களிடம் பணத்தை பெறாமல், பொருளாதார வசதிகளை உரிய முறையில் செய்து கொடுக்க ஒரு வேண்டிய கட்டாயத்தில் இலங்கையின் அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள்.