4B movement: ட்ரம்புக்கா ஓட்டு போட்டீங்க..! நோ டேட்டிங், நோ கல்யாணம், உடலுறவு - ஆண்களுக்கு எதிராக அமெரிக்க பெண்கள் போராட்டம்
4B movement: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு வாக்களித்ததால், ஆண்களுக்கு எதிராக அந்நாட்டு பெண்கள் விநோத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
4B movement: அமெரிக்க ஆண்களுக்கு எதிராக அந்நாட்டு பெண்கள் விநோத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ட்ரம்ப் வெற்றிக்கு எதிர்ப்பு:
அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்நாட்டு வரலாற்றில் தோல்விக்கு பிறகு மீண்டும் போடிட்யிட்டு இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது நபர் இவர் மட்டுமே. இதனை ட்ரம்ப் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேநேரம், பெண்ணியவாதிகள் சிலர் ட்ரம்பின் வெற்றிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவரது வெற்றியால் பெண்களின் கருக்கலைப்பு உரிமை, பாலின சமத்துவம் மற்றும் அமெரிக்க ஜனநாயகத்தின் எதிர்காலம் ஆகியவை பாதிப்புக்குள்ளாகும் என கவலை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், ஆண்கள் அதிகப்படியாக வாக்களித்ததால் தான், ட்ரம்ப் வெற்றி பெற்றதாக கூறி அவர்களுக்கு எதிராக பெண்ணியவாதிகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆண்களுக்கு எதிராக பெண்கள் போராட்டம்:
சமூக வலைதளங்களில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பில், ட்ரம்புக்கு வாக்களித்த ஆண்களுக்கு எதிராக பெண்கள் ”4B Movement” எனப்படும் "செக்ஸ் ஸ்டிரைக்கில்" ஈடுபட வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த 4 ஆண்டுகளுக்கு உடலுறவு இல்லை, டேட்டிங் இல்லை, திருமணம் இல்லை, டிரம்பிற்கு வாக்களித்த ஆண்களுடன் குழந்தையும் பெற்றுக் கொள்ளப்போவது இல்லை என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதனை ஏற்று, டிக்டோக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில், இளம் பெண்கள் தாங்கள் பிரம்மச்சாரியாக இருக்க சபதம் செய்யும் வீடியோக்களைப் பகிர்ந்து வருகிறார்கள். டேட்டிங் செயலிகளை டெலிட் செய்வது மற்றும் மொட்டை அடித்துக் கொள்வது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம், “எங்கள் குரல்கள், உரிமைகள் மற்றும் உடல்கள் விவாதத்திற்கானது அல்ல என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்” எனவும் பெண்கள் தெரிவித்து வருகின்றனர்.
”4B” என்பதன் பொருள் என்ன?
- குழந்தைகள் வேண்டாம் (No Babies) - டிரம்ப்புக்கு வாக்காளத்தவர்களிடம் இருந்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள மாட்டோம்.
- ஆண் நண்பர்கள் வேண்டாம் (No Boyfriend) - ட்ரம்புக்கு வாக்களித்த நபர்களை டேட் செய்ய மாட்டோம்.
- உறவுகள் வேண்டாம் (No Branches) - ட்ரம்பை ஆதரித்தவர்களுடன் உடல் ரீதியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாகவோ உறவு வைத்துக்கொள்ளமாட்டோம்.
- பிணைப்பு இல்லை (No Binding) - ட்ரம்ப் ஆதரவாளர்களுடன் காதல் அல்லது பாலியல் பிணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம்
கொரியா பாணியில் அமெரிக்காவில் போராட்டம்
”4B இயக்கம்” எனப்படும் இந்த அசாதாரண எதிர்ப்பு கொரிய பெண்ணியவாதத்தால் ஈர்க்கப்பட்டது ஆகும். இது பாலின அதிகார சமநிலையை மறுவரையறை செய்ய ஆண்களிடமிருந்து உடலுறவை நிறுத்தும் போராட்டத்தை உறுதியளிக்கிறது. '4B' இயக்கம் 2019 இல் தென் கொரியாவில் உருவானது. அங்கு பெண்கள் ஆணாதிக்கத்தை எதிர்த்துப் போராடியதன் ஒருபகுதியாக, பெண்கள் ஆண்களுடன் உடலுறவு கொள்ள எதிர்ப்பு தெரிவித்தனர். அதே பாணியை தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணியவாதிகளும் முன்னெடுத்துள்ளனர்.