காசாவில் போர் தள்ளிவைக்கப்படுமா? மெளனம் கலைத்த ஐநா பாதுகாப்பு கவுன்சில்
கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி போர் வெடித்திருந்தாலும், 40 நாள்களாக காசா போர் குறித்து அமைதி காத்து வந்தது ஐநா பாதுகாப்பு கவுன்சில்.
இஸ்ரேல் நடத்தி வரும் போரால் பாலஸ்தீன பகுதியான காசா நிலைகுலைந்துள்ளது. கடந்த 40 நாள்களாக நடந்து வரும் போர், உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தாக்குதலை பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தொடங்கியிருந்தாலும், தற்காத்து கொள்கிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் அப்பட்டமான போர் விதி மீறல்களில் ஈடுபட்டு வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலில் இதுவரை, 11,500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 4,650 குழந்தைகளும் 3,145 பெண்களும் அடங்குவர். மருத்துவமனை, அகதிகள் முகாம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் மனிதத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
சர்வதேச போர் விதிகளை மீறியதா இஸ்ரேல்?
போரில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்பது போர் விதியாக இருக்கும் சூழலில், குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது தாக்குதல் நடத்தி இஸ்ரேல் அப்பட்டமான போர் மீறலில் ஈடுபட்டு வருவம கவலை அடைய செய்துள்ளது. காசாவில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என அரபு நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் கோரிக்கை விடுத்து வருகிறது.
ஒருபுறத்தில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என அரபு நாடுகளும் ஐநாவும் வலியுறுத்தி வரும் நிலையில், காசாவில் அத்தியாவசிய பொருள்களை எடுத்து செல்ல போரை ஒத்திவைக்க வேண்டும் என அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், இஸ்ரேல், எதற்கும் உடன்படவில்லை.
போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவாக 120 நாடுகள் வாக்களித்த போதிலும், அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், உக்ரைன், பிரிட்டன் உள்ளிட்ட 45 நாடுகள் தீர்மானத்தை புறக்கணித்தது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் முக்கிய தீர்மானம்:
இந்த நிலையில், மனிதாபிமான அடிப்படையில் போரை உடனடியாக தள்ளி வைக்கக் கோரி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீவு நாடான மால்டா கொண்டு வந்த தீர்மானத்திற்கு 12 நாடுகள் ஆதரவாக வாக்களித்ததை தொடர்ந்து, அது ஏற்று கொள்ளப்பட்டது.
கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி போர் வெடித்திருந்தாலும், 40 நாள்களாக காசா போர் குறித்து அமைதி காத்து வந்தது ஐநா பாதுகாப்பு கவுன்சில். இப்படிப்பட்ட சூழலில், தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. அதில், "அப்பாவி மக்களுக்கு அவசர உதவிகள் எடுத்து செல்லும் நோக்கில் காசா முழுவதும் போதுமான நாள்களுக்கு போரை தள்ளி வைக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன் ஆகிய நாடுகள், தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்திருக்கும் பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை, போர் தள்ளிவைக்கப்படாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.