Zelenskyy vs Trump: வாக்குவாதம் செய்ததற்கு மன்னிப்பு கேட்டாரா ஜெலன்ஸ்கி.? ட்ரம்ப்பின் சிறப்பு தூதர் கூறுவது என்ன.?
Zelenskyy vs Donald Trumpஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் வாக்குவாதம் செய்ததற்காக, ஜெலன்ஸ்கி மன்னிப்பு கோரினாரா என்பது குறித்து, ட்ரம்ப்பின் சிறப்பு தூதர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ஓவல் அலுவலகத்திற்கு சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ட்ரம்ப்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்காக ஜெலன்ஸ்கி மன்னிப்பு கேட்டாரா என்பது குறித்து, ட்ரம்ப்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஓவல் அலுவலகத்தில் நடந்தது என்ன.?
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகத்தில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பான இந்த பேச்சுவார்த்தையின்போது, ட்ரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டது. உக்ரைனுக்கு உதவியதற்காக நன்றியுடன் செயல்பட வேண்டும் என கூறிய அதிபர் ட்ரம்ப், அமைதிக்கு உக்ரைன் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டார். மேலும், அமெரிக்கா உதவவில்லை என்றால், 2 நாட்களில் உக்ரைனை ரஷ்யா தவிடுபொடியாக்கி இருக்கும் என தெரிவித்தார்.
இதனால் டென்ஷனான உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தான் நன்றியுடன் இருப்பதாகவும், ஆனால், ரஷ்யா விஷயத்தில் பின்வாங்கப் போவதில்லை என்பதுபோல் பேசினார். இதனால் ட்ரம்ப்பும் டென்ஷனாகி பேசினார். இந்த வார்த்தைப்போர் முற்றிய நிலையில், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள், இல்லையென்றால் அமெரிக்கா உங்களுக்கு உதவாது என ட்ரம்ப் கூறியதையடுத்து, ஆத்திரமடைந்த ஜெலன்ஸ்கி ஓவல் அலுவலகத்திலிருந்து வெளியேறினார்.
ஜெலன்ஸ்கி மன்னிப்பு கோரினாரா.? விட்காஃப் கூறுவது என்ன.?
இந்த நிலையில், அச்சம்பவம் குறித்து பேட்டியளித்துள்ளார் ட்ரம்ப்பின், மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப். இவர்தான் தற்போது உக்ரைன்-ரஷ்யா இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார். அவர், ஓவல் அலுவலகத்தில் நடந்த மொத்த சம்பவத்திற்கும் மன்னிப்பு கேட்டு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடிதம் அனுப்பியதாக கூறியுள்ளார். மேலும், இது ஒரு நல்ல நகர்வு என்றும், இதனால், மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கி, தனது குழுவும், உக்ரைன் மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த குழுக்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார் விட்காஃப்.
கடிதம் வந்ததை உறுதி செய்த ட்ரம்ப்
முன்னதாக, அமெரிக்க காங்கிரஸில் கூட்டாக உரையாற்றிய ட்ரம்ப், இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை சுமூகமாக்கும் முயற்சியாக, ஜெலன்ஸ்கியிடமிருந்து ஒரு கடிதத்தை பெற்றதாக கூறி, விட்காஃபின் தகவலை உறுதி செய்தார். அதோடு, உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை நிறுத்திய சில நாட்களில் வந்த அந்த கடிதத்தை பாராட்டுவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.
ஏற்கனவே, ஓவல் அலுவலக சம்பவத்திற்குப்பின் பேட்டியளித்த ஜெலன்ஸ்கி, அதற்காக வருந்துவதாகவும், கனிமவள ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்திலும், அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு தர விரும்புவதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்த வார சவுதி அரேபியாவில், உக்ரைன் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் இடையே, ரஷ்யா உடனான போரை நிறுத்துவது குறித்த அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.