Trump Vs Iran: டீலுக்கு ஒத்துக்கோ.. இல்லன்னா வேற மாதிரி ஆயிடும்.. ஈரானை எச்சரித்த ட்ரம்ப்...
புதிய அணுசக்தி ஒப்பந்தத்திற்கு விரைவில் ஒப்புக்கொள்ளாவிட்டால், மாற்று வழிகளை யோசிக்க வேண்டியிருக்கும் என ஈரானை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்தது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

புதிய அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, ஈரானுக்கு கடந்த வாரம் கடிதம் ஒன்றை அனுப்பினார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அந்த கடிதத்தில் அவர் என்ன கூறியிருந்தார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
புதிய அணுசக்தி ஒப்பந்தம் - ஈரானுக்கு கடிதம் அனுப்பிய ட்ரம்ப்
கடந்த 2015-ல் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுடன், ஈரான் ஒரு ஒப்பந்தத்தை எட்டியது. அதில், சர்வதேச தடைகளை நீக்குவதற்கு ஈடாக, அதன் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்த ஈரோன் ஒப்புக்கொண்டது.
இந்நிலையில், 2018-ல் அமெரிக்காவில் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில், ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார். பின்னர், தற்போது மீண்டும் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அணு ஆயுத உற்பத்தியை ஈரான் அதிகரித்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, அவர்களுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை தடுக்கும் விதமாக புதிய ஒப்ந்தத்தை கொண்டுவருவதற்கு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, கடந்த வாரம் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனேனிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், ட்ரம்ப் என்ன கூறியிருந்தார் என்பது குறித்து, அமெரிக்க அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, புதிய அணுசக்தி ஒப்பந்தத்திற்க விரைவில் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். மேலும், ராஜதந்திர ரீதியில் இப்பிரச்னையை முடிக்க வேண்டும் என்று விரும்புவதாகவும், ஈரான் ஒப்புக்கொள்ளாத பட்சத்தில், வேறு விதமாக அதை முடிக்க வேண்டியிருக்கும் என்று ட்ரம்ப் கடிதத்தில் கூறியிருந்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல், ஈரானுக்கு, ட்ரம்ப் இரண்டு மாதங்கள் கெடு கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளா.
ட்ரம்ப்புக்கு கட்டுப்பட ஈரான் மறுப்பு
முன்னதாக, ட்ரம்ப்பின் கடிதத்திற்கு பதிலளித்த ஈரான் அதிபர் மசூத், அமெரிக்கா உத்தரவுகள் வழங்குவதையும், அச்சுறுத்தல்கள் விடுப்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். நான் உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன், நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்றும் ட்ரம்ப்புக்கு அவர் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இதன் மூலம், பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராக இல்லை என்பது தெளிவாகிறது. இதனால், ட்ரம்ப் தற்போது என்ன மாதிரியான நடவடிக்கையை எடுக்கப் போகிறார் என்பதை அனைவரும் உற்றுநோக்கியுள்ளனர். ஏற்கனவே, இந்த முறை அதிபர் தேர்தலின்போது, தன்னை கொல்ல நடந்த சதியின் பின்னால் ஈரான் இருப்பதாக, ட்ரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், ஈரானுக்கு எதிராக உள்ள இஸ்ரேலுடன் அமெரிக்கா கைகோர்த்துள்ளதால், ஈரானுக்கு எதிராக களமிறங்குவதில் ட்ரம்ப் உறுதியாக இருப்பதை காட்டுகிறது. தொடர்ந்து, ஈரான் எந்த மாதிரியான விளைவுகளை சந்திக்க உள்ளது என வரும் நாட்களில் பார்க்கலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

