Donald Trump; WHO-க்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; அமெரிக்கா விலகுவதால் பெரும் இழப்பு...
அமெரிக்க அதிபராக மீண்டும் ட்ரம்ப் பொறுப்பேற்றவுடன் பல அதிரடி முடிவுகளை வெளியிட்டார். அதில் முக்கியமானது, உலக சுகாதார அமைப்பிலிருந்தும், பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்தும் விலகுவது. அது குறித்து பார்க்கலாம்.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக நேற்று பொறுப்பேற்ற ட்ரம்ப், முதல் நாளிலேயே அதிரடி காட்டியுள்ளார். அதில் முக்கியமானது WHO எனப்படும் அதாவது உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவது. இதன் மூலம், WHO-வின் பண வரவிற்கு பெரும் ஆப்பு வைத்துள்ளார் ட்ரம்ப்.
WHO-விலிருந்து விலக என்ன காரணம்.?
உலக சுகாதார அமைப்பு என்பது, அனைத்துலக சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளும் ஐக்கிய நாடுகளின் ஒரு அமைப்பாகும். உலக நாடுகள் அனைத்திற்கு ஒரு பொதுவான சுகாதார விதியை ஏற்படுத்தி, தொற்று நோய் போன்ற கொடிய நோய்களுடன் போராடுவது இந்த அமைப்பின் வேலை. இதற்கு பண பலம் படைத்த பல்வேறு நாடுகளும் நிதியுதவி அளிக்கின்றன. அதில் முக்கியமான ஒரு நாடு அமெரிக்கா. கொரோனாவை சரியாக கையாளாதது, அரசியல் சார்பு போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துதான், அமெரிக்கா தற்போது இந்த அமைப்பிலிருந்து விலகியுள்ளது. கொரோனா காலகட்டத்திலேயே, உலக சுகாதார அமைப்பு அதை சரியாக கையாளவில்லை என்று குற்றம்சாட்டிய அப்போதைய அதிபர் ட்ரம்ப், அந்த அமைப்பிலிருந்து விலகும் முடிவை எடுத்தார். ஆனால், அவருக்கு பிறகு அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன், அந்த முடிவை திரும்பப்பெற்றார். இந்த நிலையில், தற்போது மீண்டும் அதிபராகியுள்ள ட்ரம்ப், WHO-விலிருந்து விலகும் முடிவை எடுத்து, அதற்கான நிர்வாக உத்தரவிலும் கையெழுத்து போட்டுள்ளார்.
பெரும் தொகையை இழக்கும் உலக சுகாதார அமைப்பு
உலக சுகாதார அமைப்பு அமெரிக்காவிடம் கோரும் நிதியுதவி நியாயமற்றதாக இருப்பதாக ட்ரம்ப் புகார் கூறியுள்ளார். அமெரிக்காவை விட கிட்டத்தட்ட 300 மடங்கு அதிக மக்கள் தொகையை கொண்டுள்ள சீனா மிகக் குறைந்த அளவிலேயே நிதியுதவி அளிப்பதாகவும், ஆனால் அமெரிக்காவிடமிருந்து பெரும் தொகையை உலக சுகாதார அமைப்பு கோரி வருவதாகவும் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவால், அந்த அமைப்பு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் நிதியுதவியை இழக்க உள்ளது.
பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்தும் அமெரிக்கா விலகல்
காலநிலை மாற்றம் மற்றும் அதன் எதிர்மறையான தாக்கங்களை சமாளிக்க, உலக நாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, வழிநடத்த ஏற்படுத்தப்பட்டதே பாரிஸ் ஒப்பந்தம். 2015-ம் ஆண்டு பாரிஸில் நடந்த ஐ.நா காலநிலை மாற்ற மாநாட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாரிஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது. இது சட்டப்பூர்வமான ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம், அனைத்து நாடுகளின் உமிழ்வை குறைப்பதற்கும், காலநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு ஏற்ப ஒன்றிணைந்து செயல்படுவதற்கும் உறுதியளிக்கிறது. மேலும், நாடுகளின் காலநிலை இலக்குகளை வெளிப்படையாக கண்காணித்து, அறிக்கை வெளியிடுவதற்கான கட்டமைப்பையும் உருவாக்குகிறது. வளரும் நாடுகளுக்கு காலநிலை மாற்றத்தை தணிக்கவும், பின்னடைவை வலுப்படுத்தவும், காலநிலை தாக்கங்களுக்கு ஏற்ப நாடுகளின் திறன்களை மேம்படுத்தவும் நிதியுதவி வழங்குதலும் இதில் ஒரு முக்கிய அம்சம்.
அந்த வகையில், அதிகரிக்கும் தட்பவெப்பத்திற்கு எதிராக போராடும் உலகின் வளரும் நாடுகளின் முயற்சிகளுக்கு தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அளிப்பதில் அமெரிக்கா குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது. இந்த நிலையில், பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவது, மற்ற நாடுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

