Trump on Gaza War: ட்ரம்ப் ஹேப்பி அண்ணாச்சி.! நெதன்யாகுவிற்கு நன்றி.! ஹமாசிற்கு வார்னிங்.! ஒர்க்அவுட் ஆன பிளான்
இஸ்ரேல் தனது 20 அம்ச போர் நிறுத்த திட்டத்திற்கு ஒப்புக்கொண்டதாக கூறியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நெதன்யாகுவிற்கு நன்றி தெரிவித்துள்ள அதே வேளையில் ஹமாசிற்கு பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் - காசா இடையேயான போரை நிறுத்த, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பெரும் முயற்சிகளை எடுத்தது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில், நேற்று ட்ரம்ப்-நெதன்யாகு-வின் முக்கிய சந்திப்பு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, இஸ்ரேல் தனது 20 அம்ச காசா போர் நிறுத்த திட்டத்திற்கு ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும், ஹமாசிற்கு கடும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். அது குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.
ட்ரம்ப் - நெதன்யாகு சந்திப்பிற்குப் பின் முக்கிய அறிவிப்பு
வெள்ளை மாளிகையில், ட்ரம்ப்பை சந்தித்துப் பேசினார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு. இந்த சந்திப்பிற்குப் பின் பேசிய ட்ரம்ப், காசாவுக்கான தனது 20 அம்சத் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதோடு, பாலஸ்தீன குழுவான ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை நிராகரித்தால், போராளிக் குழுவை அழிக்க இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் "முழு ஆதரவு" இருக்கும் என்று எச்சரித்தார்.
"ஹமாஸின் அச்சுறுத்தலை அழிக்கும் வேலையை முடிக்க இஸ்ரேலுக்கு எனது முழு ஆதரவும் இருக்கும். ஆனால், நாம் அமைதிக்கான ஒப்பந்தத்தை எட்டுவோம் என்று நம்புகிறேன். ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை நிராகரித்தால், அதற்கு சாத்தியம் இருக்கிறது, அவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பார்கள், மற்ற அனைவரும் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால், எங்களுக்கு நேர்மறையான பதில் கிடைக்கும் என்று நான் உணர்கிறேன்," என்று நெதன்யாகு உடனான சந்திப்பிற்குப் பின் ட்ரம்ப் கூறியுள்ளார்.
நெதன்யாகுவை சந்தித்து 20 அம்ச அமைதித் திட்டத்தை வெளியிட்ட பிறகு, காசா போரில் அமைதியை நிலைநாட்ட வாஷிங்டன் "மிக நெருக்கமாக" இருப்பதாக அமெரிக்க அதிபர் கூறினார்.
"நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவும் நடந்து வரும் விஷயங்கள், குறைந்தபட்சம் நாம் மிக மிக நெருக்கமாக இருக்கிறோம், நாங்கள் மிக நெருக்கமாக இருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன், உண்மையில் அங்கு வந்து ஒரு வேலையைச் செய்ததற்காக பிபி-க்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்," என்று நெதன்யாகுவை ஒரு புனைப்பெயரால்(Bibi) குறிப்பிட்டு ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.
ட்ரம்ப்பின் 20 அம்ச திட்டத்தின் சில முக்கிய அம்சங்கள்
- இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டால், ஹமாஸால் பிடிக்கப்பட்ட கடைசி பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை இஸ்ரேலிய படைகள் திரும்பப் பெறப்படும் போது, "போர் உடனடியாக முடிவடையும்" என்று 20 அம்சத் திட்டம் கூறுகிறது. அந்த ஆரம்ப காலகட்டத்தில், போர் நிறுத்தம் இருக்கும்.
- தற்காலிக சர்வதேச உறுதிப்படுத்துதல் படை மற்றும் ட்ரம்ப் தலைமையிலான ஒரு இடைநிலை அதிகாரத்தை உருவாக்குவது.
- இந்த ஒப்பந்தம், ஹமாஸ் போராளிகளை முழுமையாக நிராயுதபாணியாக்க வேண்டும் மற்றும் அரசாங்கத்தில் எதிர்கால பாதிரங்களில் இருந்து விலக்கப்பட வேண்டும். இருப்பினும், அமைதியான சகவாழ்வுக்கு ஒப்புக்கொண்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்.
- இஸ்ரேல் படைகள் திரும்பப் பெறப்பட்டபின், உதவி மற்றும் முதலீடுகளுக்காக எல்லை திறக்கப்படும்.
- ட்ரம்பின் முந்தைய வெளிப்படையான இலக்குகளிலிருந்து ஒரு முக்கியமான மாற்றமாக, பாலஸ்தீனியர்கள் வெளியேற நிர்பந்திக்கப்பட மாட்டார்கள். அதற்கு பதிலாக, "மக்கள் தங்குவதை ஊக்குவிப்போம். மேலும், சிறந்த காசாவைக் கட்டியெழுப்ப அவர்களுக்கு வாய்ப்பளிப்படும்.
கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையில் முக்கிய அரபுத் தலைவர்களை அமெரிக்க அதிபர் சந்தித்தார். ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் "அனைவரும் ஒரு சிறப்பு விஷயத்திற்காக, முதல் முறையாக தயாராக உள்ளனர்" என்று கூறினார். மேலும், ஹமாஸுக்கு எதிரான "வேலையை முடிப்பேன்" என்று வெள்ளிக்கிழமை ஐ.நா. உரையில் சபதம் செய்த நிலையில், தற்போது நெதன்யாகு உடனான சந்திப்பிற்குப் பின் இந்த போர் நிறுத்த ஒப்பந்த அறிப்பை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.





















