Trump Vs Modi: அப்படி வாங்க வழிக்கு.! மோடியுடன் பேச இருப்பதாக ட்ரம்ப் அறிவிப்பு; வரி பிரச்னை முடியும் என பதிவு
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வரும் வாரங்களில் பிரதமர் மோடியுடன் பேச இருப்பதாகவும், வரிப் பிரச்னை முடிவுக்கு வரும் என்று எண்ணுவதாகவும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியா மீது 50 சதவீத வரியை விதித்த ட்ரம்ப், ரஷ்யா உடனான வர்த்தகத்தை நிறுத்தும்படியும் வலியுறுத்தி வந்தார். ஆனால் இந்தியா அதை கண்டுகொள்வது போல் தெரியவில்லை. மேலும், சீனா மற்றும் ரஷ்யா உடன் அதிக நெருக்கம் கட்டத் தொடங்கியதால் ஆடிப்போயுள்ள ட்ரம்ப், தற்போது பிரதமர் மோடியுடன் பேச உள்ளதாகவும், வரிப் பிரச்னை வெற்றிகரமாக முடிவுக்கு வரும் என்றும் பதிவிட்டுள்ளார். அவர் பதிவின் விவரங்களை தற்போது காணலாம்.
“வரும் வாரங்களில் நண்பர் மோடியுடன் பேசுவதை எதிர்நோக்கியுள்ளேன்“
இது குறித்து தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “இந்தியாவும் அமெரிக்காவும், வர்த்தகத்தில் உள்ள தடைகளை சரி செய்வது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்“ என தெரிவித்துள்ளார்.
மேலும், “என்னுடைய மிக நல்ல நண்பர் பிரதமர் மோடியுடன் வரும் வாரங்களில் பேச இருப்பதை எதிர்நோக்கியுள்ளேன் எனவும் இரு சிறந்த நாடுகளுக்கிடையே வெற்றிகரமான முடிவு எட்டப்படுவதில் எந்த சிரமமும் இருக்காது என எனக்கு தோன்றுகிறது“ எனவும் கூறியுள்ளார்.
ட்ரம்ப்பின் மன மாற்றத்திற்கு காரணம் என்ன.?
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக 25 சதவீதத்துடன் சேர்த்து மொத்தம் 50 சதவீத வரியை இந்தியா மீது ட்ரம்ப் விதித்த சில வாரங்களில் இந்த பதிவை அவர் போட்டுள்ளார். இதற்கு முக்கிய காரணம், தன்னுடைய வரியால் இந்தியா ஆடிப் போய்விடும், தன்னிடம் வந்து கெஞ்சி நிற்பார்கள் என ட்ரம்ப் எதிர்பார்த்திருந்த நிலையில், நெருங்கிய நண்பனான ரஷ்யாவை விட்டுக்கொடுக்காமல், சீனா உடனும் இந்தியா உறவுகளை புதுப்பித்த நிலையில், ட்ரம்ப் தான் தற்போது ஆடிப் போயுள்ளார்.
உலக அரங்கில், சீனாவும், ரஷ்யாவும் அமெரிக்காவிற்கு எதிரான மிகப் பெரிய சக்திகளாக உள்ளன. இவர்களுடன், மற்றொரு வளர்ந்துவரும் பெரிய சக்தியான இந்தியாவும் இணைந்துவிட்டால், தங்களுக்கு நெருக்கடி ஏற்படும் என ட்ரம்ப் கருதியிருக்கலாம். அதனாலேயே அவர் பிரதமர் மோடியுடன் பேசும் முடிவுக்கு வந்திருக்கலாம் என எண்ணப்படுகிறது.
இதைத் தொடர்ந்து தான், இந்தியாவுடன் சுமூகமான உறவை பேண ட்ரம்ப் முயற்சித்து வருகிறார். இந்த வாரத்தின் தொடக்கத்தில் கூட, வெள்ளை மாளிகையில் இருந்து அவர் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், இந்திய-அமெரிக்க உறவு மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும், தானும் பிரதமர் மோடியும் எப்போதுமே நல்ல நண்பர்களாக இருப்போம் என்று கூறிய அவர், எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை என்றும் கூறியிருந்தார்.
இருப்பினும், இந்த தருணத்தில் பிரதமர் மோடி செய்யும் செயல் தனக்கு பிடிக்கவில்லை என்றும், ஆனால், இந்திய-அமெரிக்க உறவு என்றுமே ஸ்பெஷல் என்றும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் தான் தற்போது பிரதமர் மோடியுடன் பேச இருப்பதாக அவர் பதிவிட்டுள்ளார். இந்த முறை நல்ல முடிவு எட்டப்பட்டால் சரி.





















