China Video on Trump: அசிங்கப்பட்ட அமெரிக்க அதிபர்.. சீனா வெளியிட்ட வீடியோவால் காற்றில் பறந்த மானம்...
சீன ஊடகம் ஒன்று வெளியிட்ட வீடியோவால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மானம் கப்பலேறியுள்ளது. வைரலாகும் அந்த வீடியோ எதைப் பற்றியது தெரியுமா.?

அமெரிக்க அதிபர் தேர்தலில், ட்ரம்ப்பின் முக்கியமான பிரசார வாசகமாக இருந்தது MAGA. அதாவது மேக்கிங் அமெரிக்கா கிரேட் அகெய்ன்(Making America Great Again) என்பதன் சுருக்கம் தான் அது. அந்த பிரசாரம் மூலம் வெற்றி பெற்று அமெரிக்காவின் அதிபராகவும் ஆகிவிட்டார் டொனால்ட் ட்ரம்ப். தற்போது சீனாவுடன் அவர் வர்த்தகப் போரில் ஈடுபட்டுவரும் நிலையில், அந்த MAGA குறித்த வீடியோ ஒன்றை தான் சீன ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.
முற்றிய அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பால், முதற்கட்டமாக சீனாவிற்கு 34 சதவீத வரி விதிக்கப்பட்டது. அதற்கு பதிலடியாக, அமெரிக்க பொருட்கள் அனைத்திற்கும் 34% வரியை விதித்தது சீனா. மேலும், பல அமெரிக்க நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளையும், சில நிறுவனங்களுக்கு தடையையும் விதித்தது.
இதைத் தொடர்ந்து, சீனாவிற்கான வரியை 104%-ஆக உயர்த்தினார் ட்ரம்ப். அதற்கு பதிலடியாக, அமெரிக்காவிற்கான வரியை 84%-ஆக உயர்த்தியது சீனா. இதைத் தொடர்ந்து, சீன பொருட்களுக்கான வரியை 125 சதவீதமாக உயர்த்தினார் ட்ரம்ப். அதோடு, மற்ற நாடுகளுக்கான வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்ததுடன், சீனாவை தவிர மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கும் எனவும் அறிவித்தார்.
இதற்கும் பதில் வரி விதிப்போம் என சீனா கூறிவிட்ட நிலையில், சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 145 சதவீதமாக உயர்த்தி அறிவித்தார் ட்ரம்ப். இதைத் தொடர்ந்து, சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கான வரிகளை 125 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து சீன விமான நிறுவனங்கள் விமானங்களை வாங்கக் கூடாது எனவும், விமானம் தொடர்பான கருவிகளையும் வாங்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது சீன அரசு.
பிரச்னைகள் இந்த அளவிற்கு விஸ்வரூபம் எடுத்த நிலையில், சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை மேலும் 100 சதவீதம், அதாவது 245 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார் ட்ரம்ப். இது சீனாவிற்கு மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீன ஊடகம் வெளியிட்ட வீடியோ வைரல்
இப்படி, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் போர் உச்ச கட்டத்தில் இருக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை அசிங்கப்படுத்தும் விதமாக, சீன ஊடகம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ட்ரம்ப்பின் செயல்பாடோ சீனாவிற்கு எதிராக, ஆனால் அவர் அதிபராவதற்கான பிரசாரத்திற்கு தேவையானவற்றை வாங்கியதே சீனாவில்தான் என்பதை விளக்கும் விதமாக அந்த வீடியோ அமைந்துள்ளது.
ஆம், அதிபர் தேர்தல் பிரசாரத்திற்காக, ட்ரம்ப்பிற்கு பெரிதும் கைகொடுத்த MAGA என்று அச்சிடப்பட்ட தொப்பிகள், பிரசார பேனர்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டதே சீனாவில்தான் என்பதை விளக்கும் விதமாக, சீன நிறுவனம் ஒன்றில், அந்த பொருட்கள் தயாரிக்கப்படும் வீடியோவைத்தான் அந்த சீன ஊடகம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகும் நிலையில், ட்ரம்ப்பை அசிங்கப்படுத்தும் விதமாக இது அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.
It's pretty funny how every Democratic campaign ties itself into knots sourcing all-union, Made in USA campaign merch because their base will light them on fire if they don't, but MAGA hats have been made in bulk by Chinese factories since Day 1:pic.twitter.com/hW4g5KdTis
— Carolina Forward (@ForwardCarolina) April 14, 2025
இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், ட்ரம்ப் தற்போது இதற்கு எப்படி எதிர்வினையாற்றப் போகிறார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.





















