Trump's New Tariff: ஆஹா.. மறுபடியும் தொடங்கிட்டாருயா.! இந்திய அரிசிக்கு வந்த சிக்கல்; ட்ரம்ப்பின் அடுத்த பிளான்
போர்களை நிறுத்துவதில் பிசியாக இருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தற்போது மீண்டும் வரிகளை கையில் எடுத்துள்ளார். விவசாய இறக்குமதிகளுக்கு வரி விதிக்கப் போவதாக அவர் அறித்துள்ளார். எதற்காக தெரியுமா.?

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற உடன், வரிகளை கையில் எடுத்த அந்நாட்டு அதிபர் ட்ரம்ப், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் பரஸ்பர வரிகளை அதிக அளவில் விதித்து அதிர்ச்சியை கொடுத்தார். அது தொடர்பாக பல்வேறு நாடுகளுடன் தற்போது பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, போர்களை நிறுவத்துவதை கையிலெடுத்த ட்ரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போர் உட்பட இதுவரை 8 பேர்களை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், தற்போது மீண்டும் வரிகளை கையில் எடுத்துள்ள ட்ரம்ப், இந்த முறை விவசாய பொருட்களின் இறக்குமதிக்கு கூடுதல் வரிகளை விதிக்கப் போவதாக அறிவித்துள்ளார். அது எதற்காக தெரியுமா.?
விவசாய பொருட்கள் இறக்குமதிக்கு ஏன் புதிய வரிகளை விதிக்கிறார் ட்ரம்ப்.?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்திய அரிசி, கனடா உரங்கள் உள்ளிட்ட இறக்குமதிகளுக்கு கூடுதல் வரிகளை விதிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டு விவசாயிகளின் புகார்களைத் தொடர்ந்து ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, வெளிநாட்டு விவசாய பொருட்கள் குறைந்த விலையில் சந்தைகளில் கிடைப்பதால், உள்ளூர் விவசாய பொருட்கள் விற்பனை பாதிக்கப்படுவதாக அந்நாட்டு விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில், அமெரிக்க விவசாயிகளுக்கு உதவுவதற்காக 12 பில்லியன் டாலர்களை ஒதுக்கி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அது குறித்து பேசும்போது, இந்தியா ஏன் அதன் அரிசியை அதிக அளவில் இங்கு ஏற்றுமதி செய்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், அதனால் உள்ளூர் விவசாய உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், அதை தாம் தீர்த்துவைக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்திய அரிசி, கனடா உரங்கள் மீது கூடுதல் வரி
இந்தியா அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்வதால், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் அரிசியின் விலை சரிவை சந்தித்துள்ளதாக விவசாயிகள் கூறியதை கருத்தில் கொண்டு, அது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார். இந்தியா மட்டுமல்லாமல், உள்ளூர் விலைவாசி சரிவிற்கு வியட்நாம், தாய்லாந்திலிருந்து வரும் அரிசியும் காரணம் என்று விவசாயிகள் கூறியுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதேபோல், கனடாவிலிருந்து வரும் உரங்களும் உள்ளூர் உற்பத்தியை பாதிக்கதால், மொத்தமாக விவசாய பொருட்களுக்கு அதிக அளவில் இறக்குமதி வரியை விதித்தால், இந்த நிலைமை கட்டுக்குள் வரும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். பணவீக்கம் மற்றும் நுகர்வோர் விலைகள் குறித்த கவலைகள் உள்ளிட்ட தொடர் பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில், ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ட்ரம்ப்பிற்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் விவசாயிகள், அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் கட்டண கொள்கைகளுடன் தொடர்புடைய சந்தை சவால்களை சந்தித்து வருகின்றனர். இதனால், இந்தியா, கனடா ஆகிய இருநாடுகள் உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளன. இந்நிலையில், ட்ரம்ப்பின் இந்த புதிய அறிவிப்பு மேலும் சிக்கலை அதிகரித்துள்ளது.





















