இன்றைய நாளின் காலை முக்கியச் செய்திகள்
Tamil Nadu News Today Updates: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,830 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி உள்ளிட்ட உலகில் தொடங்கி உள்ளூர் வரையிலான இன்றைய காலைப்பொழுதின் முக்கியச் செய்திகளை வழங்குகிறது ABP நாடு.
முக்கியச் செய்திகள் எளிய வரிகளில்
1. தமிழகத்தில் திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை வரும் 2ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
2. தமிழகத்தில் கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு மாநில அரசை வலியுறித்தியுள்ளார்.
3. ரயில்களில் போதிய பயணிகள் பயணக்காததால் சில சிறப்பு ரயில்களை ரத்து செய்து தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ராமேஸ்வரம்- கன்னியாகுமரி இடையே இயக்கப்பட்டு வந்த 06165/66 ரயில்கள் வரும் மே 1ஆம் தேதி முதல் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 8 ஈஷா வித்யா பள்ளிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசுக்கு அளிக்கிறோம் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் அறிவிப்பு
5. கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தோத்தாதில் பாஸ்கரன் நாயர் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ராஜேஷ் பிந்தால் தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் நியமனம் செய்துள்ளார்.
6. 2021 ஜனவரி 16 முதல் இதுவரை 15 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை (15,65,26,140) மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது. இவற்றில் 14,64,78,983 டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7. ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை மத்திய அரசிடம்தான் கொடுக்க வேண்டும் என்றும், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு தேவையான ஆக்சிஜனை மத்திய அரசுதான் பிரித்து கொடுக்கும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
8. ரெட்டச்சுழி, ஆண் தேவதை போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் தாமிரா கொரோனா நோய்த் தொற்று காரணமாக நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 52, திருநெல்வேலியை சேர்ந்த இவர் சென்னை அசோக் பில்லர் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார்.
9. கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. அதன்படி, வெற்றிபெறும் வேட்பாளர்கள் தேர்தல் அலுவலர்களிடம் இருந்து சான்றிதழ் பெற வரும்போது அவர்களுடன் இரண்டு பேருக்குமேல் வர அனுமதி இல்லை என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
10. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,830 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்தது.