பெண்கள் இனி முழுதாக உடலை மூடும் ஆடைகள் மட்டுமே அணிய வேண்டும்: தாலிபான்கள் கெடுபிடி
பெண்கள் இனி முழுதாக உடலை மூடும் ஆடைகள் மட்டுமே அணிய வேண்டும் என தாலிபான்கள் கெடுபிடி விதித்துள்ளனர்.
பெண்கள் இனி பொது இடங்களுக்கு வரும்போது, முழுதாக உடலை மூடும் புர்கா ஆடைகள் மட்டுமே அணிய வேண்டும் என தாலிபான்கள் கெடுபிடி விதித்துள்ளனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின.
இதனையடுத்து ஆப்கானிஸ்தான் மீண்டும் தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆட்சி மாறினாலும் கூட ஆப்கானிஸ்தானுடன் வெளிநாடுகள் இன்னும் வலுவான உறவைப் பேண முன்வரவில்லை. காரணம் தாலிபான்களின் பிற்போக்குத்தனம். மேலும் தாலிபான்கள் ஆட்சி அமைக்கும் போதே நாட்டில் ஷாரியத் சட்டத்தின் படியே ஆட்சி நடக்கும் என்று கூறிவிட்டனர்.
அங்கு பெண் கல்விக்கு தடை விதிக்கப்பட்டது. பெண்கள் பணிக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. பெண்களுக்கான அழகு நிலையங்கள் மூடப்பட்டன. ஆண் துணையின்றி பெண்கள் வெளியே வரக்கூடாது எனக் கூறப்பட்டது. இப்போது பெண்கள் தங்களின் உடலை முழுவதுமாக மறைக்கும் பழமையான பாரம்பரிய நீல நிற ஆடையை மட்டுமே அணிய வேண்டும் என்ற கெடுபிடியையும் கொண்டு வந்துள்ளது.
ஏற்கெனவே கடந்த மாதம் மது விற்றதற்காக சிலரை தாலிபான்கள் பொது இடத்தில் வைத்து கசையடி கொடுத்து சிறையில் அடைத்தது உலகளவில் சர்ச்சையானது. இந்நிலையில் இப்போது பெண்கள் தங்களின் உடலை முழுவதுமாக மறைக்கும் பழமையான பாரம்பரிய நீல நிற ஆடையை மட்டுமே அணிய வேண்டும் என்ற கெடுபிடியையும் கொண்டு வந்துள்ளது.
தாலிபான்களின் தலைவரான ஹிபதுல்லா அகுந்த்சதா இந்த ஆடைக் கட்டுப்பாட்டை அமலுக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளார்.
அந்த உத்தரவில், ஒரு பெண் தன்னை முழுமையாக மறைத்து உடுத்த ஏதுவான ஆடை பாரம்பரிய சதரி தான் பொருத்தமானது. நீல நிறத்தில் உள்ள ஆப்கன் புர்காவையே இனி இந்நாட்டு பெண்கள் அணிய வேண்டும். அதுவே பெண்களுக்கு மாணினையும் மதிப்பையும் தரும். ஷாரியத் சட்டத்தின் படி பெண் குழந்தைகள் அல்லது மூதாட்டிகள் தவிர அனைத்துப் பெண்களுமே கண்கள் மட்டுமே வெளியில் தெரியும் வகையில் தான் ஆடை அணிய வேண்டும். இது ஆண்களை அநாவசியமாக பாலியல் இச்சைக்கு தூண்டாமல் இருக்கும். தந்தை, கணவர், சகோதரர் தாண்டி பிற ஆண்கள் முன்னிலையில் பெண்கள் இந்த புர்காவுடன் தான் இருக்க வேண்டும். அதேபோல் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு சரியான காரணம் இல்லாவிட்டால் அவர்கள் வீட்டிலேயே இருக்கலாம் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண் பிள்ளைகளுக்கும் தாலிபான்கள் சலுகைகள் வழங்கிவிட இல்லை. முடி திருத்தக் கூடாது, தாடியை மழித்துவிடக் கூடாது, சினிமா கூடாது, மது கூடாது, டிக் டாக் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை என பல்வேறு அடக்குமுறைகளை ஏவிவிட்டுள்ளனர் இந்த தாலிபான்கள்.
தாலிபான்கள் நாளுக்கு நாள் மனித நேயமற்ற செயல்களைக் கட்டவிழ்த்துவிடுவதாக சர்வதேச சமூகம் தனது கண்டனத்தை பதிவு செய்து வருகிறது. தாலிபான் ஆட்சிக்கு வந்த பின்னர் ஆப்கனில் கோடிக்கணக்கான மக்கள் பசி, பட்டினியில் விழுந்துள்ளனர். பெரும் பணக்காரர்களாக இருந்தவர்கள் கூட இன்று வறுமைக் கோட்டுக்குக் கீழ் வந்துள்ளனர்.