Sri Lanka Election: அசலும், வட்டியுமாக திருப்பிக் கொடுத்த இலங்கை மக்கள் - நமல் ராஜபக்சவின் நிலையை பாருங்க!
Sri Lanka President Election: இலங்கை அதிபர் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த, நமல் படுதோல்வியை சந்தித்துள்ளார்.
Sri Lanka President Election: இலங்கை அதிபர் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த நமல், ஒற்றை இலக்க சதவிகிதத்தில் மட்டுமே வாக்குகளை பெற்றுள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தல்:
அண்டை நாடான இலங்கையில் 9வது அதிபருக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. முன்னெப்போதும் இல்லாத அளவில் மிகவும் அமைதியாக நடந்து முடிந்த வாக்குப்பதிவில் 38 பேர் வேட்பாளர்களாக இருந்தனர். அவர்களில் தற்போதைய அதிபராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரமதாச, என்பிபி எனும் தேசிய மக்கள் சக்தி கூட்டணி தலைவர் அனுரா குமார திசநாயகே, மஹிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்களாக கருதப்பட்டனர். இந்நிலையில், பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வரும் சூழலில், நமல் ராஜபக்சவின் படுதோல்வி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
நமல் ராஜபக்ச படுதோல்வி:
தற்போது வரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளின்படி, அனுரா குமார திசநாயகே 40 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று, முன்னிலை வகிக்கிறார். எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச 25 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், தற்போதைய அதிபரும் சுயேச்சை வேட்பாளருமான ரணில் விக்ரமசிங்க சுமார் 17 சதவிகித வாக்குகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இலங்கை அரசில் கோலோச்சி வந்த ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த நமல் ராஜபக்ச சுமார் 2 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் அவரது படுதோல்வி உறுதியாகியுள்ளது. தமிழர்கள் வசிக்கும் பகுதியில் மட்டுமின்றி, ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்ச் வலுவாக இருந்த பகுதிகளில் கூட நமல் ராஜபக்சவால் கனிசமான வாக்குகளை கூட பெற முடியவில்லை.
ராஜபக்ச குடும்பத்தின் வீழ்ச்சி:
இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நிகழ்த்திய, ராஜபக்ச குடும்பம் தான் இலங்கை ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து கோலோச்சி வந்தது. கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் கூட, கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்று அதிபரானார். அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டார். மேலும், ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த பலர் அமைச்சர் பதவிகளையும் வகித்தனர். ஆனால், இந்த ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக, அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் பொதுமக்கள் தவித்தனர். இதன் காரணமாக அரசுக்கு எதிரான புரட்சி வெடித்தது. இதனால், ராஜபக்ச குடும்பத்தினர், தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு நாட்ட விட்டே வெளியேற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர். இத்தகைய சூழலில் தான் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்ச அதிபர் வேட்பாளராக களமிறங்கினார். ஆரம்பத்தில் இருந்தே வாக்காளர்கள் அவர் மீது கவனம் செலுத்தாத நிலையில், தற்போது படுதோல்வியை சந்தித்துள்ளார்.
வெளிநாடு தப்பியோடிய நமல் குடும்பம்:
தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் சூழலில், நமல் ராஜபக்சவின் மனைவி லிமினி வினோஜா வீரசிங்க மற்றும் அவரது தந்தை திலகசிறி வீரசிங்க ஆகியோர் அதிகாலை 3.30 மணிக்கு துபாய் புறப்பட்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அனுரா குமார திசநாயகே ஊழல்வாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதாக பேசியிருந்த நிலையில், நமல் ராஜபக்சே குடும்பத்தினர் விடிந்தும் விடியாமலும் வெளிநாட்டுக்கு சென்றுள்ளனர்.
எதேச்சதிகார போக்கு, சுயலாபத்திற்காக இனவாத அரசியலை முன்னெடுத்தது, போர் என்ற பெயரில் இலங்கை தமிழர்கள் மீது இனப்படுகொலையை நிகழ்த்தியது போன்றதன் விளைவையே, ராஜபக்ச குடும்பம் தற்போது அனுபவித்து வருவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.