மீண்டும் மீண்டும் அடிசறுக்கும் இலங்கை... மின்சார சபை தலைவர் திடீர் ராஜினாமா!
இலங்கை மின்சார சபை தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இலங்கை மின்சார சபை தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மன்னார் காற்றாலை திட்டத்தை அதானி குழுமத்திற்கு தர தனக்கு அழுத்தம் தரப்பட்டதாக பெர்டினாண்டோ புகார் தெரிவித்தநிலையில், தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, புதிய தலைவராக நளிந்த இளங்ககோன் நியமனம் செய்யப்பட்டுலதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தகவல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இலங்கை நாடாளுமன்ற குழுவிடம் நேற்று இலங்கை மின்துறை தலைவர் அளித்த வாக்குமூலத்தில், "500 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை அதானி குழுவிடம் நேரடியாக அளிக்க இந்திய பிரதமர் மோடி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை வற்புறுத்தியதாக அவரே கூறினார்".
இந்த திடுக்கிடும் தகவலை பகிர்ந்து இரண்டே நாள்களில், மின்துறை தலைவர் தான் சொன்ன கருத்தை திரும்ப பெற்றுள்ளார். உணர்ச்சி வசப்பட்டு பொய் சொல்லிவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.
பொதுத்துறைக்கான நாடாளுமன்ற கமிட்டியில் வாக்குமூலம் அளித்த சிலோன் மின்துறை தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்ட், "500 மெகாவாட் காற்றாலை மின் நிலையத்தை அதானி குழுமத்துக்கு வழங்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் வலியுறுத்துவதாக இலங்கை அதிபர் என்னிடம் தெரிவித்தார்.
கடந்த 2021ஆண்டு, நவம்பர் 24ஆம் தேதி, நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு அதிபர் என்னை வரவழைத்து, திட்டத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்குமாறு இந்தியப் பிரதமர் மோடி அழுத்தம் கொடுக்கிறார் எனக் கூறினார்" என்றார். இலங்கையின் வட கடலோர பகுதியில் அமைந்துள்ள 500 மெகாவாட் காற்றாலை மின் நிலையத்தை கட்ட அதானி குழுமம் எப்படி தேர்வு செய்யப்பட்டது என நாடாளுமன்ற குழு உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.
விசாரணையின்போது இதுகுறித்து விரிவாக விளக்கிய பெர்டினாண்ட், "அதானி நிறுவனத்திற்கு திட்டத்தை அளிப்பது குறித்து முதலீட்டு குழு உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். இதை அதிபரிடமே கூறினேன். இதுகுறித்து பரிசீலிக்குமாறு அவர் வற்புறுத்தினார்.
நிதிச் செயலாளர் தேவையானதைச் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டு கடிதம் அனுப்பினேன். இது அரசாங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் என்பதை நான் சுட்டிக்காட்டினேன்" என்றார்.
"இந்த காற்றாலை மின்திட்டத்தை ஏலம் விடவில்லையா" என விசாரணையின்போது, நாடாளுமன்ற குழு தலைவர் சரிதா ஹேரத் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த பெர்டினாண்ட், "இது அரசுக்கும் அரசுக்கும் இடையேயான ஒப்பந்தம். ஆனால் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்த விலைக் கொள்கையின்படி பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும்" என்றார்.
1989 மின்சார சட்டத்தில், போட்டி ஏலத்தை நீக்கி நாடாளுமன்றம் சட்டத்திருத்தத்தை நிறைவேற்றிய நிலையில், இந்த பொது விசாரணை நடைபெற்றது. அதானியிடம் திட்டத்தை ஒப்படைக்கவே, இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வந்ததாக பிரதான எதிர்கட்சியான சமகி ஜன பலவேகயா புகார் தெரிவித்துள்ளது.
குறிப்பட்ட ஒரு நபருக்கோ நிறுவனத்திற்கோ திட்டத்தை அளிக்க அனுமதி வழங்கியதாக வெளியான செய்திக்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மறுப்பு தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்