Sri Lanka Presidential Election: வாக்குச்சீட்டைப் படம் எடுத்தால் 7 வருடங்கள் சபைக்கு வரத் தடை.! இலங்கை சபாநாயகர் எச்சரிக்கை
இலங்கையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இலங்கையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முதலாவதாக வாக்கினை செலுத்தினார்.
இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க இரண்டாவது வாக்கையும், மூன்றாவது வாக்கை மஹிந்த அமரவீரவும் செலுத்தினர். இதற்கிடையே, வாக்குச்சீட்டைப் படம் எடுத்தால் 7 வருடங்கள் சபைக்கு வரத் தடை என எம்பிக்களுக்கு இலங்கை சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வாக்குச்சீட்டுக்களைப் படம் எடுக்கக் கூடாது. இன்றைய அதிபர் தேர்தலில் எந்தவொரு குறிப்பிட்ட வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு வற்புறுத்தவோ அல்லது செல்வாக்குச் செலுத்தவோ கூடாது.” என்றார்.
எந்த வேட்பாளருக்கு வாக்களித்தோம் என்பதை நிரூபிப்பதற்காக இன்று வாக்குச்சீட்டைப் படம் எடுக்குமாறு சில கட்சித் தலைவர்கள் தங்கள் எம்.பிக்களுக்கு அறிவித்தி இருப்பதாக செய்திகள் வெளியாகின.
இது தொடர்பாக நாடாளுமன்ற அலுவல்கள் சபைக் கூட்டத்தில் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, “அதிபர் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 20 ஆவது பிரிவின்படி 1981ஆம் ஆண்டின் 02 இலக்க சட்டத்தின் பிரகாரம் தேர்தலில் வாக்களிக்கும் எம்.பிக்களைச் செல்வாக்கு செலுத்துவது அல்லது வற்புறுத்துவது வாக்களிப்பு தொடர்பான விதிகளை மீறுவதாக அமையும்.
இது ஒரு இரகசிய வாக்கெடுப்பு என்பதால், எம்.பி. ஒருவரின் வாக்குச்சீட்டைப் புகைப்படம் எடுக்கக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் நாடாளுமன்ற அமர்வுக்குத் தடை விதிக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்தார்.
இலங்கையில் புதிய அதிபரை தேர்வு செய்யும் முறை குறித்த விவரங்களை அந்நாட்டு நாடளுமன்றம் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நடைபெறும் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் அந்நாட்டு அதிபர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், இலங்கையில் நாடாளுமன்றத்தினால் அதிபரை தெரிவு செய்த அனுபவம் இதற்கு முன்னர் இருந்த போதிலும், இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. 1993 இல், முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் மறைவைக் கருத்தில் கொண்டு, டி.பி. விஜேதுங்க அதிபரின் மீதமுள்ள பதவி காலத்திற்கு வாக்கெடுப்பே இல்லாமல் புதிய அதிபர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால், இம்முறை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்