Srilanka petrol crisis : பெட்ரோலுக்காக காத்திருந்த நேரம்... வரிசையில் நின்ற நபர் உயிர்போன சோகம்... இலங்கையில் பரபரப்பு!
இலங்கையின் எரிபொருள் தேவைக்காக இந்தியா ரூபாய் 3 ஆயிரத்து 908 கோடிக்கு கடனுதவி அளித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி மூலமாக அந்த நாட்டு மக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிப்படைத் தேவைகளான உணவு மற்றும் எரிபொருளுக்கு கூட அந்த நாட்டு மக்கள் அவதியுறும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
மக்கள் போராட்டம், பொருளாதார நெருக்கடியால் அவதிக்குள்ளாகியுள்ள இலங்கைக்கு ஆறுதலாக இந்தியா மட்டும் உதவி வருகிறது. இலங்கையின் எரிபொருள் தேவைக்காக இந்தியா ரூபாய் 3 ஆயிரத்து 908 கோடிக்கு கடனுதவி அளித்துள்ளது. இந்தியா சார்பில் வழங்கப்பட உள்ள கடைசிகட்ட எரிபொருள் இந்த மாதம் இலங்கைக்கு சென்றடையும். இதற்கு பின்பு இலங்கை எரிபொருள் தேவைக்காக மிக கடுமையான நெருக்கடியை சந்திக்கும் நிலையில் உள்ளது.
இந்தநிலையில், இலங்கையில் பெட்ரோல் நிரப்ப காத்திருந்த நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாணந்துறை வேகட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் இருந்த நபர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மூன்று சக்கர வாகனத்தின் டிரைவர் நேற்றிரவு முதல் பெட்ரோரை வாங்குவதற்காக தனது மூன்று சக்கர வண்டியின் முன் சீட்டில் அமர்ந்து வரிசையில் காத்திருந்துள்ளதுடன் இன்று அதிகாலையில் திடீரென உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை ஹிரண, விசல் உயன பிரதேசத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 53 வயதான முத்துதந்திரிகே சுகத் பெர்னாண்டோ என்பவர் தனது மகனுடன் அதே எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் காத்திருந்துள்ளார். மகன் இரு சக்கர வாகனத்திற்கு எரிபொருள் வாங்க மற்றுமொரு வரிசையில் காத்திருந்துள்ளார்.
தந்தை மயங்கி கிடப்பது குறித்து அருகில் இருந்தவர்கள் மகனுக்கு தெரிவிக்க, மகன் தந்தையை தேடி வந்தபோது மூன்று சக்கர வாகனத்தின் சீட்டில் சாய்ந்திருப்பதை கண்டு, அப்பா என அழைக்கின்றார்.
தந்தை பதிலளிக்காத காரணத்தில் தந்தை தலையை பிடித்த போது தலை சாய்ந்துள்ளதுடன் மகன் கதறி அழும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
மூன்று சக்கர வாகனத்தில் உயிரிழந்த நபரும் மற்றுமொரு நபரும் நேற்று ஒன்றாக உணவு சாப்பிட்டு விட்டு, எரிபொருளை வாங்குவதற்காக காத்திருந்துள்ளனர். வரிசையில் நின்று கொண்டிருந்த நபர் திடீரென மயங்கி விழ, அவரது வாகனத்தில் அமர வைத்துள்ளனர். மயங்கி கிடந்த நபரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த போதிலும் எவரும் வரவில்லை என அருகில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். அத்துடன் அதிகாலை வரை போலீஸாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தக் கூடிய சம்பவமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டுள்ளவர்கள் கூறியுள்ளனர். அத்துடன் இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சூழ்நிலை குறித்து கருத்தும் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பாணந்துறை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்