Spain Fire Accident: இரவு விடுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து: இதுவரை 13 உயிரிழப்பு.. 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!
மீட்பு பணியாளர்கள் சேதம் ஏற்பட்ட இடங்களில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்னும் உயரும் எனவும் அஞ்சப்படுகிறது.
ஸ்பெயினில் உள்ள இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மீட்பு பணியாளர்கள் சேதம் ஏற்பட்ட இடங்களில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்னும் உயரும் எனவும் அஞ்சப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை (நேற்று) காலை தென்கிழக்கு ஸ்பெயினில் உள்ள முர்சியாவில் அருகிலுள்ள இரவு விடுதிகளில் தீ விபத்து ஏற்பட்டது. விடுமுறை நாள் என்பதால் கொண்டாடுவதற்காக பலரும் அந்த கேளிக்கை விடுதியில் கூடியுள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அந்த விடுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அந்த தீ கட்டிடம் முழுவதும் சரசரவென பரவியது. மேலும், தீயினால் ஏற்பட்ட புகையால் உள்ளே இருந்த பொதுமக்களுக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் அறிந்து விரைந்து வந்த மீட்பு பணியினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து முர்சியாவின் மேயர் ஜோஸ் பலேஸ்டா தெரிவிக்கையில், உள்ளூர் நேரப்படி காலை 6 மணியளவில் (04:00 GMT) தீ விபத்து ஏற்பட்டது என்றும், இது மிகவும் மோசமான பாதிப்பு என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “ உயிரிழந்தவர்கள் ஃபோண்டா இரவு விடுதியில் இருந்தவர்கள். இது மூன்று கிளப் அடுத்தடுத்த இடங்களில் உள்ள பிரபல கிளப் ஆகும். தீயினால் ஏற்பட்ட விபத்தினால் கூரை இடிந்து விழுந்தது. இதனால், உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது. தீ சரியாக எங்கு தொடங்கியது என்பது குறித்தும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றும் தெரிவித்தார்.
இறந்தவர்களை நினைவுகூரும் வகையில், பலேஸ்டா நகரில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. முர்சியாவின் சிட்டி ஹாலுக்கு வெளியே கொடிகள் அரைக்கம்பத்திற்கு பறக்கவிடப்பட்டுள்ளது. பிரதம மந்திரி பெட்ரோ சான்செஸ் "முர்சியா இரவு விடுதியில் ஏற்பட்ட சோகமான தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஆதரவாக இருப்போம்” என தெரிவித்தார்.
இதற்குமுன், ஸ்பெயினின் டெனெரிஃப் தீவில் உள்ள இரவு விடுதியில் 2017 ஆம் ஆண்டு மாடி இடிந்து விழுந்ததில் 40 பேர் காயமடைந்தனர்.
இதெபோல், கடந்த 1990 ஆம் ஆண்டு ஸ்பெயினின் வடகிழக்கு நகரமான ஜராகோசாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர்.