Silvio Berlusconi: இத்தாலியை அதிக ஆணடுகள் ஆட்சி செய்த முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி காலமானார்
இரண்டாம் உலக போருக்கு பிறகான காலத்தில், இத்தாலியை நீண்ட ஆண்டுகளாக ஆண்டவர் என்ற பெருமையும் சில்வியோவை சாரும்.
இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி இன்று காலமானார். அவருக்கு வயது 86. ஊடக உலகில் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான சில்வியோ, கடந்த 1994ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையில் மூன்று முறை பிரதமராக பதவி வகித்துள்ளார்.
நீண்ட காலமாக ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்தார். தற்போது கூட, இத்தாலியில் ஆளும் கூட்டணியில் சில்வியோவின் போர்சா இத்தாலி கட்சி இடம்பெற்றுள்ளது. பாலியல் புகார்களாலும் ஊழல் குற்றச்சாட்டுகளாலும் வரி ஏய்ப்பு வழக்குகளாலும் அவரின் அரசியல் வாழ்க்கை பெரும் பின்னடைவை சந்தித்தது.
அனைவரையும் வியக்க வைத்த சில்வியோ:
இருந்த போதிலும், கடந்த 2017ஆம் ஆண்டு, அரசியலில் மீண்டும் கம்பேக் கொடுத்து அனைவரையும் வியக்க வைத்தார் சில்வியோ. தற்போது, மிலனில் உள்ள சான் ரஃபேல் மருத்துவமனையில் அவரின் உயிர் பிரிந்தது. கடந்த ஆறு வாரங்களாக ரஃபேல் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த 1936ம் ஆண்டு, மிலனில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த சில்வியோ, இத்தாலியின் மிகப்பெரிய வணிக ஒளிபரப்பு நிறுவனமான மீடியாசெட்டை தொடங்குவதற்கு முன்பு ரியல் எஸ்டேடில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். 1986 மற்றும் 2017 க்கு இடைப்பட்ட காலத்தில் பிரபல கால்பந்து அணியான AC மிலனை வைத்திருந்தார்.
போர்சா இத்தாலி கட்சியை தொடங்கிய ஒரே ஆண்டில் சில்வியோ பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். எந்த அரசாங்க பதவியை வகிக்காத ஒருவர் பிரதமராக தேர்வு செய்யப்படுவது அதுவே முதல்முறை. இதைத்தொடர்ந்து, 2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரையில் இரண்டாவது முறையாக பிரதமரானார். இரண்டாம் உலக போருக்கு பிறகான காலத்தில், இத்தாலியை நீண்ட ஆண்டுகளாக ஆண்டவர் என்ற பெருமையும் சில்வியோவை சாரும்.
மூன்று முறை பிரதமர்:
கடந்த 2006ஆம் ஆண்டு, அவர் மீண்டும் பிரதமரானார். ஆனால், கடும் கடன் பிரச்னையால் அவர் பதவி விலக நேர்ந்தது. இதையடுத்து, கடந்த 2012ஆம் ஆண்டு வரி ஏய்ப்பு வழக்கில் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். தண்டனையாக ஒரு வருட காலத்திற்கு அவர் சமூக சேவை செய்தார்.
தேர்தலில் போட்டியிட அவருக்கு விதிக்கப்பட்ட தடை, கடந்த 2018ஆம் ஆண்டு திரும்ப பெறப்பட்டது. இதனை தொடர்ந்து, பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சியுடன் சில்வியோவின் போர்சா இத்தாலி கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால், ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
கடந்த 2019ஆம் ஆண்டு, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஒரு இடத்தில் வென்றார் சில்வியோ. பின்னர், அக்டோபர் 2022இல் நடந்த பொதுத் தேர்தலில் அவரது கட்சி, ஜார்ஜியா மெலோனியின் பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சியுடன் இணைந்து கூட்டணியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. பெர்லுஸ்கோனி செனட்டராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.