டிராபிக் போலீஸ் வீட்டில் தங்க கழிப்பறை...! வியக்க வைத்த ‛ஊழல் மன்னன்’
லஞ்சம் வாங்கிய பணத்தை வைத்து ஒரு போக்குவரத்து காவல்துறை அதிகாரி தன்னுடைய வீட்டிற்கு தங்கத்தை வைத்து அறைகளை கட்டியுள்ளார்.
பொதுவாக தங்கம் என்றால் நம்மில் பலரும் வாயை பிழந்து கொண்டு பார்ப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக தங்க கழிப்பறை என்றால் நமக்கு பெரியளவில் ஆச்சரியம் வரும். அப்படி ஒருவர் தான் வாங்கிய லஞ்ச பணத்தை வைத்து வீடு முழுக்க தங்கத்தை வைத்து பல அறைகளை கட்டியுள்ளார். அதில் குளியல் மற்றும் கழிப்பறையும் அடங்கும். இப்படி எந்த இடத்தில் அந்த வீடு உள்ளது? அதை கட்டியவர் என்ன செய்கிறார்?
ரஷ்யாவின் ஸ்ட்ராவென்போல் பகுதியில் போக்குவரத்து காவல் அதிகாரியாக அலெக்ஸி சாஃபோனோவ் பணிபுரிந்து வருகிறார். இவரும் அங்கும் வேலை செய்த மற்ற காவல்துறை அதிகாரிகளும் பல நாட்களாக ஊழல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பல புகார்கள் வந்தன. அதாவது இவரும் இவருடைய சக காவலர்கள் அப்பகுதியில் வரும் உரிய ஆவணம் இல்லாத சரக்கு லாரிகள் மற்றும் வாகனங்களை லஞ்சம் பெற்று கொண்டு விட்டு விடுவதாக புகார்கள் வந்துள்ளன. இந்தப் புகார்களை தொடர்ந்து அந்நாட்டின் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தியது. அப்போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
அதன்படி இவர்கள் அனைவரும் கடந்த ஒராண்டிற்கு மேலாக பல நபர்களிடம் லஞ்சம் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் மொத்தமாக சுமார் 1.9 கோடி ரூபாய் வரை லஞ்சமாக பெற்றுள்ளனர். இதனைத் தொடந்து அப்பகுதி போக்குவரத்து காவல் நிலையம் உட்பட பல இடங்களில் இவர்கள் சோதனை நடத்தியுள்ளனர். அத்துடன் சாஃபோனோவின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த வீட்டை சோதனை செய்த போது அவர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
ஏனென்றால் அவருடைய வீட்டில் பல இடங்களில் தங்கம் வைத்து கட்டுப்பட்டுள்ளது. குறிப்பாக தங்க படிக்கட்டுகள், தங்க குளியல் அறை மற்றும் கழிப்பறை ஆகியவை இருந்தன. மேலும் பல இடங்களில் விலை மதிப்பு மிக்க பொருட்களும் இருந்தன. அவற்றுடன் சேர்ந்து சில சொகுசு கார்களும் உள்ளே நிறுத்தப்பட்டிருந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அத்துடன் அவருடன் பணிபுரிந்த 35க்கும் மேற்பட்ட அதிகாரிகளையும் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து பணம், சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
போக்குவரத்து காவலர் ஒருவரே இந்த அளவிற்கு லஞ்சம் வாங்கி சொகுசாக வீடு கட்டு இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள எதிர்க்கட்சியினர் இந்தச் சம்பவம் தொடர்பாக கடுமையான விமர்சனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்த குற்றம் உறுதியாகும் பட்சத்தில் சாஃபோனோவிற்கு 8 முதல் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: நாடாளுமன்றத்திற்குள் புகுந்த எலி..! அலறியடித்த ஓடிய எம்.பி.க்கள்...! (வீடியோ)