Putin Modi Vs Trump: புதின வண்டில ஏத்து, ட்ரம்ப் மேல வண்டிய ஏத்து; மோடியின் மாஸ்டர் பிளான் - இந்தியா வரும் ரஷ்ய அதிபர்
இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக மோதல் இருந்துவரும் சூழலில், ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் வரும் தேதிகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக உறவுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவிடம் இந்தியா வர்த்தகம் செய்வதால் கோபமாக உள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா மீது 50 சதவீத வரியை விதித்துள்ளார். ஆனால், அதைப்பற்றி கவலைப்படாமல், இந்தியா அதன் மிக நெருங்கிய நண்பனான ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், ட்ரம்ப்பின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்துவதுபோல், ரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகைக்கான தேதிகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மீது கோபமாக உள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு வரிகளை விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியாவுக்கு வரியுடன் சேர்த்து அபராதமாக 25 சதவீத வரியை கூடுதலாக விதித்து, மொத்தமாக 50 சதவீதம் என்ற அளவில் வரியை விதித்துள்ளார். இந்த அபராதம், இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாக ட்ரம்ப் விதித்தது.
இந்தியா, ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து, உக்ரைன் போருக்கு மறைமுகமாக அந்நாட்டிற்கு நிதியுதவியை செய்து வருகிறது என்பதுதான் ட்ரம்ப்பின் குற்றச்சாட்டு. ஆனால், அவரது இந்த குற்றச்சாட்டை கண்டுகொள்ளாத இந்தியா, ரஷ்யாவுடன் தொடர்ந்து நட்பையும், வர்த்தகத்தையும் தொடர்ந்து வருகிறது. ட்ரம்ப் எவ்வளவோ மிரட்டல்கள் விடுத்தும், இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. இதனால், ட்ரம்ப்பின் கோபம் உச்சகட்டத்தில் இருக்கிறது.
சீனா சென்றபோது புதினுடன் நெருக்கம் காட்டிய மோடி
சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெற்றது. அந்த 2 நாட்கள் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார் பிரதமர் மோடி.
மோடிக்காக காத்திருந்து வரவேற்ற புதின், அவரை தன்னுடைய சொகுசுக் காரில் தனியாக அழைத்துக்கொண்டு, ரிட்ஜ் கார்ல்டன் ஹோட்டலுக்கு சென்றதோடு, மோடியுடன் காரிலேயே நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அது குறித்து பின்னர் பதிவிட்டிருந்து பிரதமர் மோடி, அந்த உரையாடல் ஆழ்ந்த அறிவு சார்ந்ததாக இருந்தது என குறிப்பிட்டிருந்தார்.
அதன் பின்னர் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பிலும், புதினுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் புதினுடன் காரில் உரையாடிய போட்டோவை பகிர்ந்து, இந்தியாவும், ரஷ்யாவும் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளில் நீண்டகால தொடர்பில் உள்ளவை. இரு நாடுகளும் பல ஆண்டுகளாக பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளதுடன், இருதரப்பு வர்த்தகமும் முன்னெப்போதும் இல்லாத அளவில் உச்சமடைந்துள்ளதாக மோடி பதிவிட்டிருந்தார்.
இவர்களது இந்த நெருக்கமும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கு எரிச்சலூட்டும் விதமாக இருந்தது.
டிசம்பரில் இந்தியா வரும் புதின்
இத்தகைய சூழலில் தான், தற்போது ரஷ்ய அதிபர் புதினின் இந்திய சுற்றுப்பயணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யா சென்றிருந்த போது, புதினின் இந்திய வருகை குறித்து குறிப்பிட்டிருந்தார். ஆனால், எப்போது என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், வரும் டிசம்பர் மாதம் 5 மற்றும் 6-ம் தேதிகளில், ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின் போது, மோடியுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் புதின்.
ட்ரம்ப் என்னதான் மிரட்டினாலும், மோடி புதினுடன் அதிக நெருக்கம் காட்டுவதால், ட்ரம்ப் செய்வதறியாது தவித்து வருகிறார். இச்சூழலில், ரஷ்ய அதிபரின் இந்திய வருகை மோடியின் மாஸ்டர் பிளானாக கருதப்படுகிறது. இந்நிலையில், இந்த செய்தி அறிந்து ட்ரம்ப் என்ன ரியாக்ஷன் கொடுக்கப் போகிறார் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.





















