Ukraine Territories : ரஷ்யாவுடன் இணையும் உக்ரைனிய பகுதிகள்...உச்சக்கட்ட போருக்கு மத்தியில் அதிரடிகாட்டும் புதின்
ரஷியா ஆக்கிரமித்துள்ள உக்ரைன் பகுதிகளை நாளை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் ரஷியா அதிகாரப்பூர்வமாக இணைக்க உள்ளது.
ரஷியா ஆக்கிரமித்துள்ள உக்ரைன் பகுதிகளை நாளை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் ரஷியா அதிகாரப்பூர்வமாக இணைக்க உள்ளது. இதை, ரஷிய அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உறுதி செய்துள்ளார். ரஷிய நேரப்படி, வெள்ளிக்கிழமை மதியம் 3 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
#UPDATE Moscow will formally annex four Russia-occupied regions of Ukraine at a Kremlin ceremony on Friday, President Vladimir Putin's spokesman said Thursday.
— AFP News Agency (@AFP) September 29, 2022
Map shows areas where votes on becoming part of Russia were organised by Moscow, September 23-27#AFPGraphics @AFP pic.twitter.com/zZs17gnLgL
இதுகுறித்து டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், "புதிய பகுதிகளை ரஷிய கூட்டமைப்புடன் இணைப்பது தொடர்பான ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது. ரஷியாவுடன் இணைவது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்திய நான்கு பிரதேசங்களுடனும் நாளை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இது தொடர்பாக ரஷிய தரப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
கிரெம்ளினின் செயின்ட் ஜார்ஜ் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியின் போது நான்கு பிராந்தியங்களின் தலைவர்கள் ரஷியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார்கள். இந்த வாக்கெடுப்புக்கு உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் ஓரளவுக்கு ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜபோரிஜ்ஜியா பகுதிகள் வெள்ளிக்கிழமை பொதுவாக்கெடுப்பை அறிவித்தன. வாக்கெடுப்பு நடத்துவதன் அவசியத்தை ரஷிய அதிபர் புடின் தெரிவித்ததை அடுத்து நான்கு பகுதிகள் ரஷியாவுடன் இணைய உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
போர் தொடங்கி ஏழு மாதங்களுக்குப் பிறகு, ரஷியா பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முன்னதாக, முன்னாள் ரஷிய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ், கிழக்கு உக்ரைன் பகுதிகளை ரஷியாவுடன் இணைப்பது மற்றும் அவற்றின் எல்லைகளை மறுவரையறை செய்யும் முடிவை மாற்ற முடியாது என்றும், அதை பாதுகாக்க ரஷியா எந்த நடவடிக்கையும் எடுக்கும் என்றும் கூறினார்.
அத்தகைய வாக்கெடுப்பு ரஷியாவிற்கு ஆதரவாக செல்லும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால் உக்ரைனின் ராணுவத்தை ஆதரிக்கும் மேற்கத்திய அரசுகள் அதை அங்கீகரிக்காது. போரில் உக்ரைன் ராணுவம் முன்னிலை வகிக்கும் நேரத்தில் ரஷியாவிற்கு சண்டையை தீவிரப்படுத்த இந்த வாக்கெடுப்பு மேலும் வாய்ப்பாக அமையும்.
டான்பாஸ் பிராந்தியத்தின் பெரும்பகுதியாக லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகள் விளங்குகின்றன. இது 2014 முதல் பிரிவினைவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியிலிருந்தே, ரஷிய தாக்குதல் நடத்தி வருகிறது.