ராஜ குடும்பத்தில் சர்ச்சை.. ராணி எலிசபெத்தை பார்க்க மேகன் அனுமதிக்கப்படவில்லையா? வெளியான தகவல்
"இவ்வளவு சோகமான நேரத்தில், மேகன் பால்மோரலில் இருப்பது சரியல்ல என சார்லஸ் ஹாரிஸிடம் கூறியுள்ளார்" என செய்தி வெளியாகியுள்ளது.
எலிசபெத் மகாராணி இறப்பதற்கு முன்பு அவரை காண்பதற்கு மனைவி மேகன் மார்க்கலை அழைத்து வர வேண்டாம் என தனது இளைய மகன் ஹாரியிடம் இளவரசர் சார்லஸ் (இப்போது மூன்றாம் சார்லஸ் மன்னர்) கூறியதாக பிரிட்டன் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மகாராணி இறப்பதற்கு முன்பு, அவருடன் இருக்க வேண்டும் என நெருங்கிய உறவினர்கள் பலர் பால்மோரல் கோர்ட்டுக்கு விரைந்த நிலையில், ஹாரி மட்டும் கடைசியாக வியாழன் அன்றுதான் அங்கு சென்றுள்ளார்.
அதேபோல, வெள்ளிக்கிழமை அன்று முதல் ஆளாக அங்கிருந்து கிளம்பியவரும் ஹாரிதான். இதன் மூலம், அவர் ராஜ குடும்பத்தின் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை என்பது தெளிவாகிறது. "இவ்வளவு சோகமான நேரத்தில், மேகன் பால்மோரலில் இருப்பது சரியல்ல என சார்லஸ் ஹாரியிடம் கூறியுள்ளார்" என செய்தி வெளியாகியுள்ளது. இளவரசர் வில்லியமின் மனைவி கேட்டும் செல்லவில்லை என்றும் உண்மையில் மிக நெருக்கமான குடும்பத்தினர் மட்டுமே அங்கு இருக்க வேண்டும் என்றும் ஹாரிக்கு சுட்டிக்காட்டப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மகாராணியை காண மேகன் வரவேற்கப்படவில்லை என்பதை சார்லஸ் மிகத் தெளிவாக ஹாரியிடம் கூறி இருக்கிறார்.
உண்மையை சொல்லப்போனால், ஹாரி, அவரின் பாட்டி எலிசபெத்துடன் நெருக்கமாக இருந்திருக்கிறார். அது, 2016ஆம் ஆண்டு வெளியான வீடியோவில் தெளிவாக தெரிந்தது. அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவும், தங்களது பிரிவு உபசார விழாவில் மைக்கை கீழே போட்டிருப்பர். அதை போன்றே, எலிசபெத்துடன் இணைந்து ஹாரி செய்திருப்பார்.
எலிசபெத் இறந்தபோது ஹாரி பிரிட்டனில் இருந்தது என்பது முற்றிலும் தற்செயலான நிகழ்வு. மகாராணி இறப்பதற்கு முன், அவர் தனது மனைவி மேகனுடன் எப்போதும் வசிக்கும் அமெரிக்காவில் இருந்துள்ளார். ஹாரி, தனது குடும்ப உறுப்பினர்களை பார்ப்பதற்கான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. மார்ச் 2021 இல், ஹாரி - மேகன் தம்பதியினர் நேர்காணல் ஒன்றை கொடுத்தனர். அது சர்ச்சையை கிளப்பியிருந்தது. ராஜ குடும்பத்தின் யார் பெயரையும் சொல்லவில்லை என்றாலும் இனவாதத்துடன் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.
அரச குடும்பத்தில், தனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியின்மை தன்னை தற்கொலையின் விளிம்பிற்கு தள்ளியது என்றும் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார். ஹாரியால் கர்ப்பமானபோது குழந்தையின் தோல் எந்த நிறத்தில் இருக்கும் என்பது குறித்து குடும்ப உறுப்பினர்கள் பேசியதாக அவர் கூறினார். மேகனின் தாய் கறுப்பினத்தவர் அப்பா வெள்ளையினத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேர்காணல் பெரும் விவாதத்தை கிளப்பிய நிலையில், அதற்கு ராஜ குடும்பம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.