Sowmya Swamination : தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்றுக்களால் இப்படி நடக்கலாம்.. டாக்டர் சௌமியா சுவாமிநாதன்
பல்வேறு தடுப்பூசிகளால் வழங்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தியைக் எதிர்கொள்ளும் வகையில் வைரஸ் மாறுவதற்கான சிறிய ஆபத்து உள்ளது என்று அவர் கணித்துள்ளார்
கொரோனா பெருந்தொற்று உலகை உலுக்கி மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்த நிலையில் தற்போது வழங்கப்படும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளின் எதிர்ப்புத் தன்மையைக் கடக்க வைரஸ்களுக்கு ஆற்றல் உண்டாகச் சிறிய வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் முன்னாள் விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
பல்வேறு தடுப்பூசிகளால் வழங்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தியைக் எதிர்கொள்ளும் வகையில் வைரஸ் மாறுவதற்கான சிறிய ஆபத்து உள்ளது என்று அவர் கணித்துள்ளார். அதனால் அதுகுறித்த தொடர் கண்காணிப்பு முக்கியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தடுப்புப்பூசி போட்டாலும் கொரோனா பாதிப்புக்குப் பிறகு மாரடைப்பு மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து நான்கு முதல் ஐந்து சதவீதம் அதிகம் என்றும் சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
"கொரோனாவுக்குப் பிறகு மாரடைப்பு, நீரிழிவு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது என்பது நன்கு நிறுவப்பட்டுள்ளது. தடுப்பூசிக்குப் பிறகு மாரடைப்பு வருவதற்கான ஆபத்து நான்கு முதல் ஐந்து சதவீதம் அதிகமாகும்,கொரோனா தொற்று என்பது அடுத்தடுத்த மாரடைப்புகளுக்கு ஒரு முக்கிய ஆபத்து காரணி" என்று அவர் மேலும் கூறினார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பெருந்தொற்று கட்டுக்கடங்காமல் பரவியதை அடுத்து அந்த வைரஸின் பல பிறழ்ந்த பதிப்புகளை உலகம் கண்டுள்ளது; அதில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா மற்றும் ஆஸ்திரேலியாவில் அதிகம் பெருகிவரும் ஓமைக்ரான் வகையின் XBB.1.5 வேரியண்ட அதன் மிகச் சமீபத்திய வருகையாகும்.
முன்னதாக, COVID-19 தொற்றுநோயின் தாக்கம் குறித்து சீனா மிகவும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று சீனாவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார், அமெரிக்க எரிசக்தி துறை இந்த தொற்றுநோய் சீன ஆய்வக கசிவால் ஏற்பட்டது என அறிவித்த பின் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
யு.எஸ். சேம்பர் ஆஃப் காமர்ஸ் நிகழ்வில் வீடியோ இணைப்பு மூலம் பேசிய நிக்கோலஸ் பர்ன்ஸ், ஐ.நா. சுகாதார நிறுவனம் பலப்படுத்தப்பட வேண்டுமானால், உலக சுகாதார அமைப்பில் (WHO) இன்னும் தீவிரமான பங்கை சீனா எடுக்க வேண்டும் என்றார். "COVID-19 பற்றி வுஹானில் மூன்று ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது என்பது குறித்து சீனா இன்னும் நேர்மையாக இருக்க வேண்டும்" என்று பர்ன்ஸ் கூறினார். டிசம்பர் 2019 இல் கொரோனா தொற்று முதலில் சீனாவில் பரவியதை சுட்டிக்காட்டினார்.
சீன ஆய்வகக் கசிவிலிருந்து தான் கொரோனா தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க எரிசக்தி துறை கூறியுள்ளது. ஆனால் இந்த கூற்றை பெய்ஜிங் தரப்பில் மறுக்கபட்டுள்ளது. ஜனாதிபதி ஜோ பிடனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தொற்றுநோயின் தோற்றம் குறித்து உளவுத்துறை வட்டாரத்தில் பலவிதமான கூற்றுகள் இருப்பதாகவும் அவர்களில் பலர் தங்களிடம் போதுமான தகவல்கள் இல்லை என்றும் கூறியுள்ளனர் என தெரிவித்தார்.