Rahul Gandhi: ”ஜனநாயகத்தின் மீது தாக்குதல்” ராகுல் காந்தி பேச்சு.. கடும் எதிர்ப்பை பதிவு செய்த பாஜக! என்ன நடந்தது?
Rahul Gandhi: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் இந்தியாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Rahul Gandhi: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் இந்தியாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். கொலம்பியாவில் உள்ள EIA பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் உரையாற்றும் போது நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஆளும் பாஜக இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பை அரித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
ராகுல் காந்தி பேச்சு:
இது தொடர்பாக ராகுல் காந்தி பேசுகையில்,”இந்தியாவில் நடைபெற்று வரும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்தான் மிகப்பெரிய ஆபத்து. உண்மையில் இந்தியா அதன் அனைத்து மக்களுக்கும் இடையிலான உரையாடல்... வெவ்வேறு மரபுகள், மதங்கள், கருத்துக்களுக்கு இடம் தேவை. அந்த இடத்தை உருவாக்குவதற்கான சிறந்த வழி ஜனநாயக அமைப்புதான்.
தற்போது, ஜனநாயக அமைப்பின் மீது ஒட்டுமொத்த தாக்குதல் நடந்து வருகிறது. எனவே அது ஒரு ஆபத்தாக இருக்கிறது. சீனா செய்வதை நாங்கள் செய்ய முடியாது, அதாவது மக்களை அடக்கி ஒரு சர்வாதிகார அமைப்பை நடத்துவது. எங்கள் சட்டம் அதை ஏற்றுக்கொள்ளாது” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் 2016 ஆம் ஆண்டு பாஜக அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு கொள்கையை கடுமையாக விமர்சனம் செய்தார். “பணமதிப்பிழப்பு என்பது ஒரு தோல்வியடைந்த கொள்கை. அது வேலை செய்யாத ஒன்று”என்றார்.
எதிர்ப்பு தெரிவித்த பாஜக:
ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடரபாக பாஜக எம்.பி.கங்கனா ரணாவத் பேசுகையில்,”அவர் ஒரு அவமானகரமானவர். அவர் எல்லா இடங்களிலும் நாட்டை அவமதிக்க முயற்சிக்கிறார், நாட்டை விமர்சிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். இங்குள்ள மக்கள் சண்டையிடுபவர்கள், அவர்கள் நேர்மையானவர்கள் அல்ல என்று அவர் கூறினால், இதன் மூலம் அவர் இந்தியர்கள் மூளையற்றவர்கள் என்பதைக் காட்ட முயற்சிக்கிறார்”என்றார்.
பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி பேசுகையில்,”இந்தியாவையும் அதன் முன்னேற்றத்தையும் வெறுக்கும் ஒரு மனிதனால் மட்டுமே அந்நிய மண்ணுக்குச் சென்று இந்தியா ஒரு தலைவராக இருக்க முடியாது என்று சொல்ல முடியும். இந்த மனநிலையின் கீழ், காந்தி-வத்ரா குடும்பம் 70 ஆண்டுகளாக நாட்டை ஏழையாக வைத்திருந்தது, நாட்டை பின்னோக்கி வைத்திருக்க முயன்றது.
பிரதமர் மோடியின் கீழ், இந்தியா 4 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாகவும், நான்காவது பெரிய பொருளாதாரமாகவும் மாறிவிட்டதை முழு காந்தி-வத்ரா குடும்பமும் பார்க்கும்போது, ராகுல் காந்தி இந்தியாவின் ஜனநாயகத்தையும் முன்னேற்றத்தையும் பொறாமை மற்றும் வெறுப்பால் தாக்குகிறார்”என்றார்.





















