சிந்து நதி நீரில் கட்டுமானம் கட்டினால்...அதை...2வது முறை மிரட்டல் விடுத்த பாகிஸ்தான அமைச்சர்
Pakistan-India: சிந்து நதி நீரில் ஏதேனும் கட்டுமானத்தை கட்டினால் , அதை தகர்ப்போம் என பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் மிரட்டும் தொணியில் பேசியிருக்கிறார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், இந்தியாவிற்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், சிந்து நதியில் இந்தியா ஏதேனும் கட்டமைப்பைக் கட்டி, சிந்து நீர் ஒப்பந்தத்தை மீறினால், பாகிஸ்தான் அதை தகர்க்கும் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகளாக இருந்தனர். இதையடுத்து, பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் அரசு உதவி செய்து வருவதாக கூறி, இந்தியா குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடியின் ஒரு பகுதியாக, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்ததாவது, சிந்து நதியில் எந்தவொரு கட்டமைப்பையும் கட்டுவது, ஆக்கிரமிப்பாகத்தான் பார்க்கப்படும் என்று கவாஜா ஆசிப் கூறினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், இந்தியா ஏதேனும் ஒரு கட்டமைப்பை உருவாக்க முயன்றால், நாங்கள் அதைத் தகர்ப்போம். ஆக்கிரமிப்பு என்பது பீரங்கிகளையோ அல்லது தோட்டாக்களையோ வைத்து மட்டும் சுடுவது மட்டுமல்ல. அதற்கு பல முகங்கள் உள்ளன. அந்த முகங்களில் ஒன்று தண்ணீரைத் தடுப்பது அல்லது திசை திருப்புவது. இதனால் பசி மற்றும் தாகத்தால் மரணங்களுக்கு வழிவகுக்கும் என்று ஆசிப் மீண்டும் வலியுறுத்தினார்.
சிந்து நதியில் அணை உள்ளிட்ட ஏதேனும் கட்டுமானத்தை இந்தியா கட்டும் முயற்சியை மேற்கொண்டால், பாகிஸ்தான் அந்த கட்டமைப்பை அழித்துவிடும்.
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறுவது இந்தியாவுக்கு எளிதானது அல்ல, இதுதொடர்பாக பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களை அணுகும்.
அரசியல் ஆதாயங்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி இந்த நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக கவாஜா ஆசிப் இந்தியாவை அச்சுறுத்த முயற்சிப்பது இது இரண்டாவது முறையாகும்.
கடந்த வாரம் தெரிவித்ததாவது, எங்களிடம் ஏவுகணைகள் இருப்பது காட்சிக்காக இல்லை, இந்தியா நோக்கி இருக்கின்றன என்றும் மிரட்டும் தொணியில் பேசினார். இந்தியாவுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் "எந்தவொரு நிகழ்விற்கும் தயாராக உள்ளது, இந்தியாவால் தொடங்கப்படும் எதற்கும் எங்கள் பதிலடியை கொடுப்போம் என மிரட்டும் தொணியில் பேசியிருக்கிறார்.






















