Khawaja Asif Vs India: “இருமுனைப் போருக்கு தயார்“; மீண்டும் இந்தியாவை வம்புக்கிழுக்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
இந்தியாவுடன் மறைமுகப் போரை நடத்தி வருவதாக ஏற்கனவே கூறிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், தற்போது போருக்கு தயாராக இருப்பதாகக் கூறி மீண்டும் இந்தியாவை வம்பிழுத்துள்ளார்.

பாகிஸ்தானில், ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அந்நாட்டு பாதுகாப்ப அமைச்சர் கவாஜா ஆசிப், கிழக்கே இந்தியா மற்றும் மேற்கே ஆப்கானிஸ்தான் என இருமுனைப் போருக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கவாஜா ஆசிஃப் கூறியது என்ன.?
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுடனான இருமுனைப் போருக்கு இஸ்லாமாபாத் முழுமையாக தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். புது தில்லியில் சமீபத்தில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்புப் படைகளின் தகவலின்படி, இந்தத் தாக்குதலை பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான ஜெய்ஷ்-இ-முகமதுவுடன் தொடர்புடைய ஒரு பயங்கரவாதி நடத்தியதாகத் தெரிகிறது.
இந்நிலையில், ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த கவாஜா ஆசிப், "நாங்கள் தயாராக இருக்கிறோம்; கிழக்கு (இந்தியா) மற்றும் மேற்கு (ஆப்கானிஸ்தான்) எல்லைகளை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். முதல் சுற்றில் அல்லாஹ் எங்களுக்கு உதவினான், இரண்டாவது சுற்றிலும் அவன் எங்களுக்கு உதவுவான்" என்று கூறியுள்ளார். மேலும், "அவர்கள் இறுதிச் சுற்றை விரும்பினால், போரைத் தவிர வேறு வழியில்லை," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் "இந்தியாவால் ஆதரிக்கப்பட்டதாகக் கூறப்படும்" குழுக்களைக் குற்றம் சாட்டினார். ஆனால், 12 பேர் கொல்லப்பட்ட குண்டுவெடிப்புக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) பொறுப்பேற்றுள்ளது.
இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு எச்சரிக்கை
முன்னதாக, மற்றொரு ஊடகத்தில் பேசிய ஆசிப், இஸ்லாமாபாத்தில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து காபூலுக்கு "போர்" ஏற்படும் என்று எச்சரித்திருந்தார். பாகிஸ்தானில் வன்முறைக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் தாலிபான் ஆட்சி புகலிடம் அளிப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், இஸ்லாமாபாத் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்த "கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது" என்று அச்சுறுத்தினார்.
காபூலில் "ஒன்றுபட்ட அரசாங்கம்" இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் தலிபான் ஆட்சி வெவ்வேறு குழுக்கள் மற்றும் பிரிவுகளைக் கொண்டதாகவும், வெவ்வேறு நலன்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டதாகவும் கூறினார்.
"சிலர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளனர், மேலும் சிலரின் தொடர்புகள் வேறு இடங்களிலிருந்து இழுக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த இரண்டு சம்பவங்களும், ஆப்கானிஸ்தான் தரப்பிலிருந்து நடக்கக்கூடிய வரவிருக்கும் ஆக்கிரமிப்புக்கு முன்னோடி என்று நான் நினைக்கிறேன்; உண்மையில், ஆப்கானிஸ்தான் வழியாக நம் நாட்டில் நடத்தப்படுவது இந்திய ஆக்கிரமிப்பாகும்," என்றும் அவர் கூறினார்.
எந்தவொரு தவறான ராணுவ நடவடிக்கைகளுக்கும் எதிராக இந்தியாவையும் ஆப்கானிஸ்தானையும் எச்சரித்த அவர், பாகிஸ்தான் "அதே போன்ற பதிலடி கொடுக்கும்" என்று கூறினார். "பாகிஸ்தான் ஒருபோதும் எந்த ராணுவ நடவடிக்கையையும் தொடங்காது; இருப்பினும், எந்தவொரு ஆக்கிரமிப்பு செயலுக்கும் பதிலளிக்காமல் விடமாட்டோம்; நாங்கள் வலுவாக பதிலடி கொடுப்போம்," என்று கவாஜா ஆசிப் கூறினார். தனது முந்தைய நேர்காணல்களில், எந்த ஆதாரமும் இல்லாமல், காபூல் டுராண்ட் கோட்டில் "இந்தியாவின் மறைமுகப் போரை" நடத்தி வருவதாக ஆசிஃப் கூறியது குறிப்பிடத்தக்கது.





















