ஸ்விட்சர்லாந்தில் தற்கொலைக்கு பிரத்யேக கருவி: ஒரு நிமிடத்தில் வலியில்லாம உயிர் பிரியுமாம்!
தற்கொலை செய்து கொள்ள விரும்புவோர் அதனுள் புகுந்து கொண்டு ஒரு நிமிடம் இருந்தால் போதும் வலி இல்லாமல் உயிர் பிரிந்துவிடுமாம்.
தன்னம்பிக்கைப் பாடல்களை அதிகமாக கேட்ட சமூக தமிழ்ச் சமூகமாகக் கூட இருக்கலாம். இங்கே அவ்வளவு தன்னம்பிக்கை பாடல்கள், கதைகள், கட்டுரைகளும் உள்ளன.
வாழ நினைத்தால் வாழலாம் என்ற பாடல் இன்றளவும் தற்கொலை எண்ணம் மேலோங்கும் போது ஒரு மீட்பர் போல நம்பிக்கை தரும். மயக்கமா, கலக்கமா என்ற பாடல் வரிகள் வாழ்க்கையின் மீது ஒரு புதிய பார்வையை வீசும். வாழ்ந்துதான் பார்க்க வேண்டும். ஆம் அதுமட்டும் தான் மனிதனுக்கு சிறந்த வழி.
இதைப் படித்த பின்னர் தான் நீங்கள் வரவிருக்கும் செய்தியைப் படிக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.
சரி விஷயத்துக்கு வருவோம்.
ஸ்விட்சர்லாந்து நாட்டில் சவப்பெட்டி வடிவில் ஒரு இயந்திரம் செய்யப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொள்ள விரும்புவோர் அதனுள் புகுந்து கொண்டு ஒரு நிமிடம் இருந்தால் போதும் வலி இல்லாமல் உயிர் பிரிந்துவிடுமாம். அந்த பெட்டிக்குள் சுத்தமாக காற்று சுழற்சி இருக்காது என்பதால் ஆக்சிஜன் அளவு மிகமோசமான அளவுக்குக் குறைந்து ஹைபோக்சியா அல்லது ஹைபோகேப்னியா ஏற்பட்டு உயிர் பிரியும்.
ஒருவேளை அந்த இயந்திரத்துக்குள் சென்றபிறகு பயன் வந்தால் நோயாளி கண்ணை சிமிட்டினால் போதும் இயந்திரம் திறந்துவிடும். இந்த இயந்திரத்தை எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று செய்ய வேண்டியதை செய்து கொள்ளலாம். உயிர் பிரிந்த பின்னர் இந்த இயந்திரத்தின் கீழே இருக்கும் பயோடீகிரேடபிள் கேப்ஸ்யூலை அகற்றி அதனை சவப்பெட்டியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எக்ஸிட் இன்டர்நேஷனல் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தான் இந்த இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளது. இது குறித்து அதன் இயக்குநர் டாக்டர் ஃபிலிப் நிட்ஸ்கே கூறும்போது, ஸ்விட்சர்லாந்தில் கருணைக் கொலை சட்டப்பூர்வமானது. இங்கு ஆண்டுக்கு 1300 பேர் வரை இதனைப் பயன்படுத்துகின்றனர். இப்போது நாங்கள் உருவாக்கியுள்ள புதிய இயந்திரம் கருணைக் கொலைக்கு உதவும். இது அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.
ஆனால், நிட்ஸ்கேவை பாராட்டுபவர்களைவிட தூற்றுபவர்களே அதிகமாக உள்ளனர். நிட்ஸ்கேவின் கண்டுபிடிப்பு ஹிட்லர் கால கேஸ் சேம்பரைப் போன்றது என்று எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
யூத்தனேஸியா Euthanasia என்பது உடல் வதையில் இருந்து மீள்வதற்காக ஒருவரின் உயிரைத் திட்டமிட்டு முடிவடையச் செய்தல். வதையா இறப்பு அல்லது கருணைக் கொலை எனக் கூறுகின்றனர். வதையா இறப்புத் தொடர்பான வரையறைகளும் சட்டங்களும் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. எனினும் பெரும்பான்மை நாடுகளில் இதற்கு சட்ட ஏற்பு இல்லை. ஸ்விட்சர்லாந்தில் இது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாளாக நோயுற்றவர்கள், மீள முடியா நோயில் உள்ளவர்கள் இவ்வாறு தற்கொலை அல்லது அவருக்கு உணர்வு இல்லாதபோது மற்றவர்களால் கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.