Operation Sindoor: “பயங்கரவாதிகளின் சரணாலயமாக பாகிஸ்தான் திகழ்கிறது“ வெளியுறவுத்துறை பகிரங்க தாக்கு...
பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை இந்தியா தண்டித்துவிட்டது என்றும், பாகிஸ்தான், தீவிரவாதிகளின் புகலிடமாக விளங்குவதாகவும் இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா தாக்குதல் நடத்திவருகிறது. இந்நிலையில், அது குறித்த விளக்கமளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, குற்றவாளிகளை தண்டித்துவிட்டதாக கூறியுள்ள அதே வேளையில், பாகிஸ்தான் தீவிவாதிகளின் புகலிடமாக விளங்குவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து, வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அளித்த விளக்கம் குறித்து பார்க்கலாம்.
தாக்குதல் குறித்து விரிவான விளக்கமளித்த வெளியுறவுத்துறை செயலாளர்
பஹல்காம் தாக்குதல் குறித்து, இந்தியாவின் பதிலடி குறித்தும் இன்று விளக்கமளித்த இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பஹல்காமில் நடந்தது இந்தியா மீதான தாக்குதல் என்று குறிப்பிட்டார். சுற்றுலாப் பயணிகள் அவர்களது குடும்பத்தினர் முன்பு சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவித்த அவர், லஷ்கர் - இ - தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியானதாக தெரிவித்தார். பஹல்காமில் நடந்தது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஜம்மு காஷ்மீரின் அமைதியை சீர்குலைக்க பஹல்காமில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறிய மிஸ்ரி, அப்பாவி சுற்றுலாப் பயணிகளை நெற்றியில் சுட்டு தீவிரவாதிகள் கொன்றுள்ளதாக தெரிவித்தார்.
மும்பை தாக்குதலுக்குப் பிறகு பஹல்காமில் கோழைத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், லஷ்கர் - இ - தொய்காவின் துணை அமைப்பான டிஆர்எஃப் தான் பஹல்காமில் தாக்குதல் நடத்தியது என்றும் உறுதி செய்தார். அதோடு, ஐம்மு காஷ்மீரில் செழித்தோங்கிய சுற்றுலாத்துறையை சீரிகுலைக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டினார் மிஸ்ரி.
“பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான்“
பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளதாகவும், இந்தியாவில் மதக்கலவரத்தை உருவாக்கவே பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் மிஸ்ரி குறிப்பிட்டார். பாகிஸ்தானுக்கும், லஷ்கர் - இ - தொய்பாவுக்கும் இடையிலான தொடர்பு, பஹல்காம் தாக்குதல் மூலம் உலகளவில் தெரிந்துவிட்டதாகவும், பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுடனான தொடர்பு ஆதாரத்துடன் நிருபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“பயங்கரவாதிகளின் சரணாலயமாக பாகிஸ்தான் திகழ்கிறது“
தொடர்ந்து பேசிய விக்ரம் மிஸ்ரி, காஷ்மீரின் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகவும், பயங்கரவாதிகளின் சரணாலயமாக பாகிஸ்தான் திகழ்வதாகவும் குற்றம்சாட்டினார். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை அழிக்க இந்தியாவிற்கு முழு உரிமை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான், பயங்கரவாதிகளின் புகலிடமாக திகழ்வது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மிஸ்ரி, பஹல்காம் தாக்குதலில் தீவிரவாதிகளுக்கு துணை புரிந்த பாகிஸ்தான், தனக்கு அதில் தொடர்பில்லை என உலக அரங்கில் பொய் கூறி வருவதாகவும் தெரிவித்தார்.
“தீவிரவாத முகாம்களை குறி வைத்து இந்தியா தாக்குதல்“
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை குறி வைத்து இந்தியா தாக்குதல் நடத்துவதாகவும், இந்தியாவின் இன்றைய தாக்குதல் மூலம், பாகிஸ்தானில் பயங்கரவாத கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் விக்ரம் மிஸ்ரி கூறினார்.
தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் நீடிக்கிறது என குற்றம்சாட்டிய அவர், புலனாய்வு அமைப்பினர் அளித்த துல்லியமான தகவலின் அடிப்படையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.





















