கொரோனா நம்மை தொடரும்.. வாழ பழகிக்கொள்ள வேண்டும் - எச்சரிக்கும் சீன ஆராய்ச்சியாளர்
கொரோனா வைரஸ் தொற்றுடன் இனிமேல் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று வூஹான் ஆராய்ச்சியாளர் ஸி செங்லி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2019ஆம் ஆண்டு முதல் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தொற்று பாதிப்பு காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் தங்களுடைய உயிரை இழந்துள்ளனர். அத்துடன் கொரோனா தொற்று பாதிப்பு பல்வேறு நாடுகளில் பொருளாதார ரீதியிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பெருந்தொற்று இன்னும் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. இதன்காரணமாக அனைத்து நாடுகளும் தங்களுடைய மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சீனாவின் வூஹான் பகுதியிலுள்ள வைரஸ் ஆராய்ச்சி மையத்தின் தலைவரும் ஆராய்ச்சியாளருமான ஸி செங்லி கொரோனா பரவல் தொடர்பாக ஒரு திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். அதில், "கொரோனா வைரஸ் தொற்று தற்போது அதிக இடங்களில் பரவி வருகிறது. இதன் காரணமாக அந்த வைரஸ் தன்மையில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. தற்போது இருக்கும் டெல்டா வகையை போல் இனிவரும் காலங்களில் பல வகை கொரோனா வைரஸ் தொற்றுகள் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆகவே நாம் அனைவரும் கொரோனாவுடன் எப்படி வாழ்வது என்பதை பழகி கொள்ள வேண்டும்.
இந்த தொற்றிலிருந்து தற்போது உயிரை காக்க உதவது தடுப்பூசி ஒன்று தான். அதை நாம் அனைவரும் சரியாக செலுத்தி கொள்ள வேண்டும். அத்துடன் நோய் தொற்று அதிகம் இருக்கும் இடங்களில் முறையாக பரிசோதனை செய்து, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும். இந்த இரண்டு தான் நாம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்" எனக் கூறியுள்ளார்.
2019ஆம் ஆண்டு முதல் முறையாக கொரோனா நோய் தொற்று சீனாவின் வூஹான் பகுதியில் தான் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் அங்கு தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகியவை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் நோய் தொற்று கட்டுக்குள் வந்தது. இதைத் தொடர்ந்து அங்கு மீண்டும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு வர தொடங்கினர். மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் அங்கு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சூழலில் தற்போது சீனாவில் மீண்டும் டெல்டா வைரஸ் வகை கொரோனா தொற்று பரவி வருகிறது.
குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்களிடம் அதிகமாக இந்த வகை வைரஸ் தொற்று பரவியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நாஞ்சிங் என்ற பகுதியில் தற்போது கொரோனா பரவல் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மீண்டும் சீனாவில் பல பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:புர்ஜ் கலிஃபாவில் திக் திக் நிமிடங்கள்..- உச்சியில் நின்ற பெண்.. வீடியோவை வெளியிட்ட எமிரேட்ஸ்!