Nepal Flood-Landslide: நேபாளை சூறையாடும் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு; 47 பேர் உயிரிழப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்
நேபாளத்தில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால், அங்கு திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரி ஏற்பட்டு, இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தில் காணாமல் போன பலரை தேடும் பணிகளும், மீட்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நேபாளத்தை சூறையாடும் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு - 47 பேர் பலி
நேபாளத்தின் கோஷி மாகாணத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பல்வேறு மாவடட்டங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்திய எல்லைப் பகுதிக்கு அருகே உள்ள கிழக்கு நேபாளத்தின் இலாம் மாவட்டத்தில் மட்டும் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர். மன்சிபங் மாவட்டத்தில் 5 பேரும், கோசங் மாவட்டத்தில் 6 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தந்த பகுதிகளில் காணாமல் போனவர்களை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. தலைநகர் காத்மாண்டுவில் பாகமதி உள்ளிட்ட பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால், காத்மாண்டு சாலைகள் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன.
தென்கிழக்கு நேபாளத்தில் உள்ள கோசி ஆற்றில், வெள்ளம் அபாய அளவைத் தாண்டி பாய்வதால், கோசி தடுப்பணையின் 56 மதகுகளும் திறக்கப்பட்டுள்ளன. மேலும், நேபாளத்தில் நாளை வரை கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மக்கள் கவனமாக இருக்குமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவின் டார்ஜிலிங் அருகே இடிந்து விழுந்த பாலம் - 7 பேர் பலி
இதனிடையே, இந்தியாவில், மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் அருகே, மிரிக் பகுதியில், கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில், பாலம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. அச்சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தால், சிலிகுரி-மிரிக் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து நடந்த பகுதியின் பல இடங்களில் மன் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலம் இடிந்து விழுந்ததில், பல பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.





















