பிலிப்பைன்ஸ் ராணுவ விமானம் தரையிறங்கும்போது பயங்கர விபத்து: 40 பேர் மீட்பு..!
பிலிப்பைன்சின் தெற்கு ககாயன் டி ஓரோ நகரத்திலிருந்து துருப்புக்களை ஏற்றுச் சென்றபோது விபத்து நடைபெற்றுள்ளதாக ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது
பிலிப்பைன்ஸ் விமானப்படையின் சி-130 போர் விமானம் இன்று காலை விபத்துக்குள்ளானது. விபத்தின்போது விமானத்தில் இருந்த 85 பேரில், மீட்புப் பணிகளின் இதுவரை 40 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக ராணுவத் தலைவர் தெரிவித்தார். இன்று காலை விமான ஓடுபாதையில் இருந்து காணாமல்போன பிறகு, சுலு மாகாணம் மலைப்பகுதியில் உள்ள படிக்குள் (Patikul) என்ற கிராமத்தில் விபத்துக்குள்ளானதாகவும் தெரிவித்தார். பத்திரமாக மீட்கப்பட்ட அனைவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிலிப்பைன்சின் தெற்கு ககாயன் டி ஓரோ நகரத்திலிருந்து துருப்புக்களை ஏற்றுச் சென்ற போது விபத்து நடைபெற்றுள்ளதாக ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஜோலோ மற்றும் பாஸிலான் பகுதிகளில் தீவிரமாகச் செயல்பட்டுவரும் அபு சயாப் என்ற ஆயுதம் தாங்கிய இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்கு எதிராக ராணுவம் தொடர்ந்து போரிட்டு வருகிறது. "இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். விமானம் ஓடுபாதையை விட்டு விலகிய பின்பு சிறிது நேரத்தில் மீண்டும் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன" என ராணுவ தலைமை தளபதி சோபேஜனா தெரிவித்தார்.
ஹெர்குலிஸ் போர் விமானம்:
சி-130 சூப்பர் ஹெர்குலிஸ் இராணுவப் பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட விமானம் ஆகும். இதன் முதல் தயாரிப்பை லாக்கிட் மார்டின் (Lockheed Martin) நிறுவனம், 5 ஏப்ரல் 1996ல் துவங்கியது. பின்னர் 1999ல் தான் விமானத்தை பயன்பாட்டிற்கு விட்டது. இந்த விமானத்தின் தயாரிப்பு உரிமை அமெரிக்காவின் நிறுவனம் தன் கைவசம் வைத்துள்ளது.
இவ்வகையான விமானங்கள் வானில் பறந்து கொண்டிருக்கும்போதே எரிபொருளை நிரப்பும் தகுதி கொண்டது. 2011 நவம்பர் 3 ஆம் தேதிவரை 250 விமானங்களைத் தயாரித்து வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் டர்போபுரொப் (Turboprop) வகையைச் சேர்ந்த 4 எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.