Bird Dropping Painting : 3 மில்லியன் டாலருக்கு ஏலம்போனது காகம் எச்சமிட்ட ஓவியம்! : நியூயார்க்கில் ஆச்சரியம்
இது 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நியூயார்க்கில் மீண்டும் கண்டுபிடிக்கப்படும் வரை, அது ஒரு பண்ணையில் நலிந்த நிலையில், புறக்கணிக்கப்பட்டு, பறவை எச்சங்களால் கறை படிந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
காகத்தின் கழிவு இருந்ததால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் ஒரு பண்ணைக் கொட்டகையில் கிடந்த ஓவியம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு சுமார் மூன்று மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 17ம் நூற்றாண்டின் அரிய கலைப் படைப்பான இந்த ஓவியம் சமீபத்திய பிரபல ஸோத்பைஸ் ஏலத்தில் அமெரிக்க டாலர் மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
ஸ்டூலில் அமர்ந்திருக்கும் முதியவரின் ஓவியமான அது பெல்ஜிய ஓவியரான அந்தோனி வான் டிக் உடையது. அவரது புகழ்பெற்ற ஓவியமான செயிண்ட் ஜெரோமுக்கான ஆய்வு ஓவியமாக அது இருந்துள்ள்து. லைவ் மாடல்களில் இருந்து அந்தோனி உருவாக்கிய இரண்டு பெரிய ஓவிய ஆய்வுகளில் இதுவும் ஒன்று என்பதால் இந்த ஓவியம் பெருவகையான பாராட்டைப் பெற்றது.
வான் டிக் 1615 மற்றும் 1618 க்கு இடையில் இந்த ஓவியத்தை வரைந்திருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நியூயார்க்கில் மீண்டும் கண்டுபிடிக்கப்படும் வரை, அது ஒரு பண்ணையில் நலிந்த நிலையில், புறக்கணிக்கப்பட்டு, பறவை எச்சங்களால் கறை படிந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆல்பர்ட் பி. ராபர்ட்ஸ் என்ற ஓவிய சேகரிப்பாளரால் இந்த ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஏல நிறுவனமான சோதேபே பகிர்ந்துள்ளது.
குறிப்பாக புறக்கணிக்கப்பட்ட துண்டுகளை சேகரிப்பதில் ஆர்வம் கொண்ட ராபர்ட்ஸ் அந்த ஓவியத்தை $600க்கு வாங்கினார். இதனை வரைந்த கலைஞர் யார் என்று அவருக்குத் தெரியாது. அவர் வாங்கிய சிறிது நேரத்திலேயே கலை வரலாற்றாசிரியர் சூசன் ஜே. பார்ன்ஸ் அதை வான் டிக்கின் படைப்பு என்று அடையாளம் காட்டினார்.
ராபர்ட்ஸ் பின்னர் இதன் விற்பனைக்கான வேலையை சோத்பேயிடம் ஒப்படைத்தார். இதை அடுத்து ஓவியம் இந்த மாத தொடக்கத்தில் ஏலத்தில் விடப்பட்டது. $2,000,000 முதல் $3,000,000 வரை விற்கப்படும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர்.
இறுதியில் அது $3,075,000க்கு ஏலம் போனது.
ஓவியத்தை விவரித்திருந்த சோத்பே, மனித உடற்கூறியலை ஒரு அவுட் ஆஃப் தி வோர்ல்ட் அனுபவமாக வான் டிக் தனது ஓவியத்தில் வெளிப்படுத்தியுள்ளார் எனக் குறிப்பிட்டிருந்தது.
"வான் டிக் தனது ஓவியத்தில் இருந்த இந்த ஆண் மாடலை ஒன்றுக்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் பயன்படுத்தினார்; அவர் இந்த உருவத்தின் தலைப் பகுதியை வரைவதில் இருமுறை ஆய்வு செய்துள்ளார், இது மற்ற வரலாற்று ஓவியங்கள் பிற்காலத்தில் உருவாக ஒரு சிறந்த அடிப்படையாகச் செயல்பட்டது" என்று ஏல நிறுவனமான சோத்பே கூறியுள்ளது.
இந்த ஓவியத்தை உறுதி செய்த பார்ன்ஸ் கூறுகையில் “இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஓவியம் எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் அது இருந்த நிலையிலேயே இருப்பது மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.