Mali Updates | அதிபர் மற்றும் பிரதமர் கைது; ராணுவ கட்டுபாட்டில் மாலி!
மாலி நாட்டு அதிபர், பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகிய மூவரையும் அதிரடியாக கைது செய்துள்ள அந்நாட்டு ராணுவம் தற்போது அவர்களை தடுப்புக்காவலில் வைத்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் தற்போது அமைச்சரவை சீரமைப்பு நடந்து வருகின்றது. இந்த அமைச்சரவை சீரமைப்பிற்கு பின் அந்நாட்டின் அதிபராக பா தேவ் ஆட்சி செய்து வருகின்றார். அதே சமயம் முக்தர் குவானி என்பவர் அதிபராகவும் சொலிமேன் டவ்கரே என்பவர் பாதுகாப்பு அமைச்சராகவும் கடந்த ஞாயிற்று கிழமை வரை பதவியில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் அமைச்சரவை மறுசீரமைப்பு நடந்து முடிந்த பிறகு அந்நாட்டு ராணுவத்தை தொடர்பு கொண்டதாக கூறி இருவர் அவர்களது பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து அதிபர் மாளிகைக்குள் அதிரடியாக புகுந்த அந்நாட்டு ராணுவம் அதிபர் பா தேவ், பிரதமர் முக்தர் குவானி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் சொலிமேன் டவ்கரே ஆகிய மூவராயும் கைது செய்து தற்போது அவர்கள் மூவரையும் தடுப்புக்காவலில் வைத்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதேபோல மியான்மார் நாட்டில் அந்நாட்டு ராணுவம் அதிரடியாக ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது. மியான்மர் நாட்டில் தற்போது நடந்துவரும் ராணுவ ஆட்சியில் பொதுமக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் நடப்பில் இருந்த ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து மின் ஆங் தலைமையிலான ராணுவ ஆட்சி மியான்மரை தன்வசம் வைத்துள்ளது. ராணுவ ஆட்சியை எதிர்த்து போராடும் மக்களை இரக்கமின்றி தாக்கிவருகின்றது மியான்மர் ராணுவம்.
இந்நிலையில் அனுதினமும் மியான்மர் ராணுவத்தை எதிர்த்து போராடிய மக்கள் மீது குண்டு வீச்சு நடத்தப்பட்டது. மியான்மர் நாட்டின் யங்கொண்-னின் தெற்கு டகோன் பகுதியில் இந்த தாக்குதல் நடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த தாக்குதலில் மூன்று பேர் இறந்திருக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
சொந்த நாட்டில், சொந்த ராணுவத்தால் வதைக்கப்படும் மக்கள் வாழவழியின்றி தற்போது தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு தப்பியோடி வருகின்றனர். ஏற்கனவே மியான்மார் நாட்டில் இருந்து மலேசியாவிற்கு தஞ்சம் புகுந்த ரேஹகியா அகதிகளுக்கு மலேசிய அடைக்கலம் கொடுக்காமல், மியான்மருக்கு திரும்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மணிப்பூர் அரசும் மியான்மரில் இருந்து அகதிகளாக வருவோருக்கு உணவு, தண்ணீர் ஆகியவற்றை தவிர்த்து அடைக்கலம் கொடுக்கக்கூடாது என்று அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலக அளவில் வெகு சில நாடுகளில் ராணுவத்திற்கும் அரசுக்கும் இடையே நடக்கும் போராட்டங்களால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ராணுவ ஆட்சி மக்களாட்சியை தோற்கடிக்கும்போதும் மக்கள் புரட்சி அங்கு வெடிக்கிறது. ஆனால் சாமானிய மக்களால் ஒரு நாட்டின் ராணுவத்தை எதிர்கொள்வது என்பது முடியாத காரியமாக மாறுகிறது. இந்த 21ம் நூற்றாண்டிலும் மியான்மார் போன்ற பல நாடுகளில் பொதுமக்கள் தங்கள் சொந்த ராணுவத்தால் கொல்லப்பட்டு வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.