Malawi: அதிர்ச்சி.. ஈரானை தொடர்ந்து மலாவி.. விமான விபத்தில் துணை அதிபர் மரணம்!
மலாவி நாட்டில் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உள்பட 10 பேர் சென்ற விமான விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர்.
விமான விபத்தில் சிக்கி உலக தலைவர்கள் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அவர் மரணம் அடைந்திருப்பாதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய விமானம்: கிழக்காப்ரிக்காவில் உள்ள மலாவியின் தலைநகரான லிலாங்வேயிலிருந்து நேற்று காலை 9:17க்கு துணை அதிபர் உள்பட 10 பேர் விமானத்தில் புறப்பட்டுள்ளனர். சுசு சர்வதேச விமான நிலையத்தில் காலை 10:02க்கு அந்த விமானம் தரையிறக்கப்பட விருந்தது.
ஆனால், விமானம் கிளம்பிய சிறிது நேரத்திலேயே அதன் சிக்னல் கிடைக்கவில்லை. இதனால், அந்த விமானம் நேற்று மாயமானதாக தகவல்கள் வெளியாகின. இப்படிப்பட்ட சூழலில், தற்போது அந்த விமானம் விபத்துக்குள்ளானதை அந்நாட்டு அதிபர் லசாரஸ் சக்வெரா உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து மலாவி நாட்டு அரசு செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "நேற்று மாயமான மலாவி நாட்டு பாதுகாப்பு விமானத்தை தேடும் பணி சோகத்தில் நிறைவடைந்தது. இதை பொதுமக்களுக்கு வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா மற்றும் 9 பேர் பயணம் செய்த விமானம் சிக்கங்காவா வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. துரதிஷ்டவசமாக, விமானம் விபத்தில் சிக்கியதால் அதில் பயணம் செய்த அனைவரும் மரணம் அடைந்துள்ளனர்.
Malawi’s president Lazarus Chakwera announces that wreckage of missing plane carrying Vice-President Saulos Chilima and nine others who were travelling with him has been found- with no survivors 1/2 pic.twitter.com/0U7I7MYOfa
— Samira Sawlani (@samirasawlani) June 11, 2024
ரேடார் (தொலைக்கண்டுணர்வி) இருந்து விமானம் மாயமானதை அடுத்து அதைத் தேடும் பணி உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. துணை அதிபர் சென்ற விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் மலாவி பாதுகாப்பு படை, காவல்துறை, வான் படை ஆகியவை ஈடுபட்டது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானம் மாயமானதை அடுத்து பிரிட்டன், அமெரிக்க நாடுகளின் உதவியை மலாவி நாடு நாடியது. மாயமான விமானத்தை கண்டிபிடிக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது மலாவி நாட்டு துணை அதிபர் மறைவுக்கு உலக நாடுகள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.
மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த மாதம்தான், ஈரான் நாட்டு அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. அதில், அவர் மரணம் அடைந்த சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.