Air India Bomb Threat: ” நவ.1-19, ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடக்கும்” - காலிஸ்தானி தீவிரவாதி வார்னிங்
Air India Bomb Threat: ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெறலாம் என, காலிஸ்தானி தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
Air India Bomb Threat: சீக்கிய படுகொலையின் 40 வது ஆண்டு நினைவு நாளில், ஏர் இந்தியா விமானம் தாக்கப்படலாம் என காலிஸ்தானி தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னு எச்சரித்துள்ளார்.
ஏர் இந்தியா விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்:
நவம்பர் 1 முதல் 19 வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என்று காலிஸ்தானி தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் விமான பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா டுடே செய்தியின்படி, சீக்கிய படுகொலையின் 40 வது ஆண்டு நினைவு நாளில் ஏர் இந்தியா விமானம் தாக்கப்படலாம் என்று அவர் கூறினார். சீக் ஃபார் ஜஸ்டிஸ் (SFJ) நிறுவனர் குர்பத்வந்த் சிங் பன்னுன் கடந்த ஆண்டு இதேபோன்ற அச்சுறுத்தலைக் கொடுத்திருந்தார். இந்திய விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வரும் நேரத்தில் பன்னுவின் இந்த சமீபத்திய மிரட்டல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு வெளியான மிரட்டல்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் வெளியிட்ட ஒரு வீடியோவில், டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் பெயர் மாற்றப்படும் என்றும், நவம்பர் 19 அன்று மூடப்பட்டிருக்கும் என்றும் பன்னுன் கூறியிருந்தார். அப்போதும் கூட அந்த வீடியோவில் ஏர் இந்தியா விமானத்தில் பொதுமக்கள் பயணிக்க வேண்டாம் என அவர் எச்சரித்து இருந்தார்.
பஞ்சாப் முதலமைச்சருக்கு கொலை மிரட்டல்
காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன், இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மற்றும் மாநில காவல்துறை தலைமை இயக்குனர் கவுரவ் யாதவ் ஆகியோரை கொலை செய்யப்போவதாகவும் மிரட்டல் விடுத்தார். ஜனவரி 26 அன்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மீது குண்டர்களை ஒன்றிணைத்து தாக்குமாறு அவர் தனது ஆதரவாளர்களுக்கு வலியுறுத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி:
கடந்த 2020ம் ஆண்டு ஜுலை மாதம் தேசத்துரோகம் மற்றும் பிரிவினைவாத குற்றச்சாட்டின் கீழ் பன்னுனை தேடப்படும் பயங்கரவாதியாக உள்துறை அமைச்சகம் அறிவித்தது. தனி சீக்கிய நாடு கோரும் SFJ என்ற குழுவிற்கு பன்னுன் தலைமை தாங்குகிறார். அதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு, தேச விரோத செயல்களில் ஈடுபட்டதற்காக SFJ ஐ ஒரு சட்டவிரோத அமைப்பாக இந்தியா தடை செய்ததும் குறிப்பிடத்தக்கது. இவர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு பல்வேறு குற்ற வழக்குகளை பதிவு செய்துள்ளது.
அதிகரிக்கும் போலி வெடிகுண்டு மிரட்டல்கள்!
இதனிடையே, இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். பரிசோதனையின் முடிவில் அனைத்துமே புரளி எனத் தெரியவந்ததால் நிம்மதி அடைந்தனர். இந்தியாவில் இருந்து உள்நாட்டு நகரங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் இண்டிகோ, விஸ்தாரா உள்ளிட்ட விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் அதிரகரித்து வரும் நிலையில், விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் தலைவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது.