Joe Biden: 'ஒரு பக்கம் மழை.. இன்னொரு பக்கம் குடை...' ஜப்பானில் படாதபாடு பட்ட அமெரிக்க அதிபர் பைடன்..!
ஜோ பைடன் விமானத்தில் இருந்து படிக்கட்டுகளில் இறங்கி, மழையில் நடந்து செல்வது தெரிகிறது. மழையின் காரணமாக, அப்போது பெரிய கருப்பு குடையை விரிக்க தடுமாறிய அவரை சுற்றி இருந்த கேமராக்கள் படம் பிடித்துள்ளன.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜப்பானுக்குச் சென்றபோது குடையை விரிக்க சிரமப்படும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. G7 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக ஜனாதிபதி ஜப்பான் மரைன் கார்ப்ஸ் விமான நிலையமான இவாகுனிக்கு வந்தடைந்த போது, இந்த சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது.
குடையை விரிக்கத் தடுமாறிய பைடன்
சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட இந்த வீடியோ, கிட்டத்தட்ட ஒரு நிமிடம் ஓடுகிறது. அதில் ஜோ பைடன் ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் இருந்து படிக்கட்டுகளில் இறங்கி, மழையில் நடந்து செல்வது தெரிகிறது. மழையின் காரணமாக, அப்போது பெரிய கருப்பு குடையை விரிக்க தடுமாறிய அவரை சுற்றி இருந்த கேமராக்கள் படம் பிடித்துள்ளன.
குடையை கையில் வைத்துக்கொண்டே பேசிய பைடன்
ஜோ பைடனை ஜப்பானின் வெளியுறவுத் துறை அமைச்சர் கென்சி யமடா மற்றும் பிற உயரதிகாரிகள் வரவேற்றனர், அதே நேரத்தில் அவர் குடையைப் பயன்படுத்த திணறியபோது, குடை திறக்காததால் குடையை கையில் வைத்துக்கொண்டு அவர்களிடம் பேச தொடங்கினார். தொடர்ந்து அவரது கையின் கீழ் குடையை வைத்தபடி எல்லோரிடமும் பேசிக்கொண்டிருந்தார்.
வைரல் ஆன வீடியோ
அமெரிக்க ஜனாதிபதி பைடன் மழையில் நனைவதைக் கவனித்த அவரைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பின்னர் வந்து அவருக்கு வேறு குடைகளைப் பிடித்தனர். அதன் பின்னர் இறுதியாக அவரே அவரது குடையை எப்படியோ விரித்து பிடித்துக்கொண்டு நடந்தார். ட்விட்டரில், ஒரு பயனர் இந்த வீடியோவைப் பகிர்ந்து, "ஜப்பானில் தரையிறங்கிய பிறகு, பைடன் குடையுடன் போராடுகிறார்" என்று எழுதியிருந்தார்.
It took Biden almost a minute to figure out how to open his umbrella after landing in Japan in a torrential downpour pic.twitter.com/n1s2KJH9pZ
— RNC Research (@RNCResearch) May 18, 2023
கமெண்டுகள்
பொதுவாகவே எல்லா சமூக வலைதளங்களிலும், அவர் குடையுடன் போராடுவதை பலர் கிண்டல் செய்து வரும் நிலையில், கமென்டுகளில் பலர் கேலியாக பேசியிருந்தனர். அவர் பார்பதற்கு பரிதாபமாக இருப்பதாக பலர் கருத்து தெரிவித்தனர். பலர் கேலி செய்தாலும் பலர் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளனர். "அவர் குடையை விரிக்க முடியாமல் தடுமாறிய நிலையிலும், அந்த மழையிலும், நின்று வந்தவர்களை கவனித்து பேசிக்கொண்டிருக்கிறார். இதற்கு பெயர்தான் பண்பு. இந்த பண்பினால்தான் நீங்கள் இங்கே நிற்கிறீர்கள்" என்று ஒருவர் கமென்ட் செய்திருந்தார்.
ஜோ பிடன் 2024 ஆம் ஆண்டு மறுதேர்தலுக்கான திட்டங்களை அறிவித்துள்ள நிலையில், கருத்துக் கணிப்புகள் அவருக்கு சாதகமாக இருந்தபோதிலும், மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்கள் அவர் இரண்டாவது முறையாக பணியாற்ற முடியாத அளவுக்கு வயதாகிவிடுவார் என்று நம்புவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.