Submarine Missing: காணாமல்போன நீர்மூழ்கி கப்பல்.. டைட்டானிக் சிதிலங்களை பார்க்கச்சென்ற 5 கோடீஸ்வரர்கள் மரணம்..
டைட்டானிக் கப்பலின் சிதிலங்களை பார்க்கச்சென்ற சுற்றுலா பயணிகள் 5 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற நீர்மூழ்கி கப்பல் உள்ளுக்குள்ளேயெ வெடித்து சிதறியதில் 5 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The five people aboard a missing submersible died in what appears to have been a 'catastrophic implosion,' a US Coast Guard official said, bringing a grim end to the massive international search for the vessel that was lost during a voyage to the Titanic https://t.co/wipUWoY68S pic.twitter.com/MP0F10ljd7
— Reuters (@Reuters) June 22, 2023
உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாகக் கருதப்பட்ட டைட்டானிக் 1912-ம் ஆண்டு அட்லாண்டிக் கடல் பகுதியில், பனிமலையில் மோதி விபத்தில் சிக்கி கடலில் மூழ்கியது. இதில் பயணித்த 1,500 பேர் உயிரிழந்தனர். பல்வேறு கட்ட ஆராய்ச்சிக்கு பின்னர் 1985-ம் ஆண்டு வடக்கு அட்லாண்டிக் பகுதியிலிருந்து 400 மைல் தென்கிழக்கே நியூபவுன்ட்லாண்ட் தீவு அருகே கடலுக்கு அடியில் 3,800 மீட்டர் ஆழத்தில் சிதைந்து போயிருந்த அக்கப்பலின் முன்பாகம் கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த பகுதியை சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டது. ஏராளமான மக்கள் டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தை பார்க்க ஆர்வத்துடன் வருவார்கள். Ocean Gate Expedition என்ற நிறுவனம் தனது நீர்மூழ்கி கப்பல் மூலம் சுற்றுலா பயணிகளை அப்பகுதிக்கு அழைத்து செல்வது வழக்கம். அதன்படி சுற்றுலா பயணிகளை கடந்த ஞாயிறு அன்று, டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தை பார்வையிட டைட்டன் நீர்மூழ்கி கப்பல் மூலம் அழைத்துச் சென்றது. ஆனால் அந்த நீர்மூழ்கி கப்பல் கிளம்பிய ஒரு மணி நேரம் 45 நிமிடங்களில் நீர்மூழ்கி கப்பல் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை முற்றிலுமாக இழந்துவிட்டது என தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அமெரிக்க கடலோர காவல்படை, பேரிடர் மீட்பு படையினர் மற்றும் அமெரிக்க ராணுவம் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் அவசர காலத்தில் சுமார் 4 நாட்கள் அதாவது 96 மணிநேரம் வரை சுவாசிக்க ஏதுவாக ஆக்ஸிஜன் இருக்கும் என நீர்மூழ்கி கப்பல் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 30 மணிநேர ஆக்ஸிஜன் சப்ளை இருக்கும் என்ற நிலையில், நீர்மூழ்கி கப்பல் காணாமல் போன இடத்தில் இருந்து பயங்கர சத்தம் கேட்டதாக அமெரிக்க ராணுவம் தரப்பில் கூறப்பட்டது. இதனால் அப்பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தில், டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் பாகங்கள் சிதறி கிடப்பது கண்டறியப்பட்டது. Catastropic Implosion காரணமாக நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறி இருக்கலாம் என கடலோர காவல்படை தரப்பில் கூறப்பட்டது. இதனால் அதில் பயணம் மேற்கொண்ட 5 பேரும் உயிரிழந்தனர். இறந்தவர்களின் உடல் எப்போது மீட்கப்படும் என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. அதே சமயம் தேடுதல் பணி நிறைவடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.