இலங்கை மக்களின் சேமிப்பில் 70 சதவீதத்தை கொள்ளையடித்த ராஜபக்சவினர்?
ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கையானது காகத்தின் கூட்டில் குயில் முட்டையிட்டது போன்று இருப்பதாக ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மக்களின் பணத்தில் 70 சதவீதத்தை ராஜபக்சவினர் கொள்ளையடித்துள்ளதாக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக் காட்டியுள்ளார்.
ராஜபக்சவினரின் கட்சியான பொதுஜன பெரமுனவின் கைதியாக அதிபர் ரணில் விக்ரமசிங்க சிறைப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கையானது காகத்தின் கூட்டில் குயில் முட்டையிட்டது போன்று இருப்பதாக ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ரணில் விக்ரமசிங்க பொதுஜன பெரமுனவின் முழு ஆதரவோடு அதிபராகியுள்ளதையும், அவரின் தற்போதைய செயற்பாடுகளையும் ஒப்பிட்டு குறித்த முதுமொழியை அவர் குறிப்பிட்டுள்ளார். இடைக்கால வரவு செலவு திட்டத்தின் மீதான முதல் நாள் விவாதத்தின் போது பேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ராஜபக்சவினர் 70 சதவீதத்தை கொள்ளயடித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையை தற்போது சில உலக நாடுகள் முன்னுதாரணமாக வைத்து பேசுவதை சுட்டிக்காட்டி உள்ள ஹர்ஷ டி சில்வா, அண்மையில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இலங்கைக்கு ஏற்பட்டிருக்கும் நிலையை ஒப்பிட்டு பேசியதை அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
ஒரு போதும் இலங்கையை போன்று பங்களாதேஷை வீழ்ச்சியடைய செய்ய போவதில்லை என அந்நாட்டு பிரதமர் சேக் ஹசீனா ஒப்பீட்டளவில் பேசியதை, பல உலக நாடுகளும் அதைப் பற்றி விமர்சிக்கின்றன என நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்திருக்கிறார்.
இலங்கையை விட பொருளாதார மட்டத்தில் பின் தங்கி இருந்த பங்களாதேஷ் தற்போது இலங்கைக்கு கடன் வழங்கும் அளவிற்கு திடீரென வளர்ச்சி அடைந்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
பங்களாதேஷ் மட்டுமல்ல பல தெற்காசிய வலைய நாடுகள் தற்போது இலங்கையை விட முன்னேற்ற பாதையில் இருப்பதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.
இலங்கையும் வியட்நாமும் ஆடை உற்பத்தி ஏற்றுமதியில் ஒரே நிலையில் இருந்ததாகவும் ஆனால் தற்போது வியட்நாம் பெருமளவு ஏற்றுமதிகளை செய்வதாகவும் அதன் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
இலங்கையும், வியட்நாமும் வருடத்திற்கு மூன்று அரை பில்லியன் பொருட்களை ஏற்றுமதி செய்து வந்ததாக ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் 2021ஆம் ஆண்டு இலங்கை பன்னிரெண்டரை பில்லியன் பொருட்களை ஏற்றுமதி செய்த போது ,வியட்னாம் மூந்நூற்றைம்பது டொலர் பில்லியனுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது என தரவுகளுடன் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஆளும் கட்சியினருக்கு எடுத்துக் கூறியுள்ளார்.
இலங்கையில் ஆட்சிக்கு வந்த தலைவர்கள் தமக்கேற்றவாறு நாட்டை மாற்றி அமைத்தார்களே தவிர, உலக வளர்ச்சியின் ஓட்டத்திற்கு ஏற்றவாறு இலங்கையை மாற்றி அமைக்க முனையவில்லை என அவர் குற்றஞ் சாட்டியிருக்கிறார்.
மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை வழங்கி அவர்களிடம் இருந்து வரியை வசூலித்தது மட்டும்தான் இந்நாட்டு தலைவர்கள் செய்த வளர்ச்சி என ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.
பொய் குற்றச்சாட்டுகளை நாடு முழுவதும் பரப்பி ,இனவாதத்தை தோற்றுவித்ததும் இலங்கையின் ஆட்சியாளர்களின் மேலும் ஒரு பாதகமான செயல் என அவர் தெரிவித்துள்ளார். இன வாதத்தை நாட்டினுள் ஏற்படுத்தி நாட்டை வறுமை நிலைக்கு இட்டுச் சென்றது மட்டுமல்லாமல் தற்போது மக்கள் வாழ முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளார்கள் இலங்கையின் தலைவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.
இலங்கையில் கடந்த மாதம் உணவு பணவீக்கம் 80 சதவீதமாக உயர்வடைந்து இருப்பதாக நாடாளுமன்றத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் ஒரு பாணின் விலை 300 ரூபாவை எட்டி இருப்பதாக கூறப்படுகிறது.
ஆகவே கடந்த சில வருடங்களை அலசி ஆராயும் போது ராஜபக்ச குடும்பத்தினர் மக்களின் பணத்திலிருந்து 70% வரை கொள்ளை அடித்துள்ளது உண்மை தான் என நாடாளுமன்றத்தில் ஹர்ஷ டி சில்வா வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் இலங்கைக்கு உலக நாடுகள் மனிதாபிமான ரீதியாக வழங்கிய உதவிகள் மக்களை சென்றடைந்துள்ளதா என்பதும் ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது .கிராமப்புறங்களில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு எந்த நிவாரணங்களும் பிரித்து வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. ஆட்சியாளர்கள் எங்கெங்கெல்லாம் கடன் வாங்கலாமோ அவற்றைத் தான் பார்க்கிறார்களே தவிர, அதிக விலையேற்றமும், அத்தியாவசிய பொருட்களின் இல்லாமையும் மக்களை கடுமையாக பாதித்திருக்கிறது