Bangladesh: 112 குழந்தைகள்; மொத்தம் 1000: வங்கதேசத்தில் டெங்குவால் அதிகரிக்கும் உயிரிழப்பு
வங்கதேசத்தில் டெங்குவால் 112 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து வங்கதேசத்தில் 1,000 க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு டெங்குவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 மடங்காக உயர்ந்துள்ளது என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் தற்போது வரை குறைந்தது 1,017 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 2,09,000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது 2000 ஆம் ஆண்டு முதல் பரவிய தொற்றுநோய்க்குப் பிறகு வங்கதேசத்தில் கொசுக்களால் பரவும் நோயின் மிக மோசமான தாக்கம் ஆகும் என நிபுணர்கள் கூறியுள்ளனர். பச்சிளம் குழந்தைகள் மற்றும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என 112 குழந்தைகள் டெங்குவால் உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுதியுள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட தெற்காசிய நாட்டில் இந்நோய் வேகமாகப் பரவி வருவதால், அந்நாட்டு மருத்துவமனைகள் நோயாளிகள் அனுமதிக்க இடம் இல்லாமல் திணறி வருகிறது.
டெங்கு என்பது வெப்பமண்டல பகுதிகளில் பரவும் ஒரு நோயாகும், மேலும் அதிக காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி, தசை வலி போன்ற அறிகுறிகள் தென்படும். அதுமட்டுமின்றை மிகக் மோசமான சூழலில் இரத்தப்போக்கு ஏற்பட்டு மரணத்திற்கு வழிவகுக்கும். சிக்குன்குனியா, மஞ்சள் காய்ச்சல் மற்றும் ஜிகா போன்ற கொசுக்களால் பரவும் வைரஸ்களால் டெங்கு மற்றும் பிற நோய்கள், காலநிலை மாற்றத்தால் வேகமாகவும் பரவுகின்றன என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. டெங்குவைக் குணப்படுத்தும் குறிப்பிடத்தக்க தடுப்பூசி அல்லது மருந்து எதுவும் இல்லை என்பதால் ஆரம்பக் கட்டதிலிருந்தே சிகிச்சை வழங்குவது முக்கியம். இது தெற்காசியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழைக் காலத்தில் பொதுவாகக் காணப்படும் நோயாகும்.
ஏடிஸ் ஈஜிப்டி கொசு தேங்கி நிற்கும் நீரில் உருவாகி நோயை பரப்பும் என்பதால் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் உள்ள மருத்துவமனைகள் சமீபத்திய ஆண்டுகளில் குளிர்கால மாதங்களில் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அனுமதிக்கத் தொடங்கியுள்ளன. மீண்டும் மீண்டும் நோய்த்தொற்று ஏற்படும் நபர்களுக்கு அதிக ஆபத்து உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வங்கதேசம் 1960 களில் இருந்து டெங்கு நோயைப் பதிவு செய்துள்ளது, ஆனால் 2000 ஆம் ஆண்டு முதல் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. குறிப்பாக டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தப் போக்கு ஏற்படுகிறது. மிகவும் மோசமான நிலையில் நோயாளிகள் இறக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது.
வங்கதேசம் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் பருவநிலை மாற்றம் காரணமாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. மழைக்காலம் என்பதால் மக்கள் தங்களது சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளவும் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். முக்கியமாக குழந்தைகள் வெளியே செல்லும் போது கொசு கடிக்காமல் இருக்க முழுக்கை சட்டையும் முழுக்கால் ஆடைகளும் போடும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வீடுகளில் கொசுக்கள் இல்லாமல் இருக்க கொசு ஒழிப்பு மருந்துகளை பயன்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )