Israel-Lebanon Agreement: இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுக்கிடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம்: எதற்காக தெரியுமா?
இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
கடல் எல்லையை பகிர்ந்து கொள்வதில் இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையை தீர்த்து கொள்வதற்காக வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை இரு நாடுகளும் சமசரத்துடன் எப்படி ஏற்றுக் கொண்டன. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான அனைத்து பிரச்சினைகளும் சரிசெய்யப்படுமா என்பது குறித்து காண்போம்.
லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஆசிய கண்டத்தின் மேற்கே உள்ள நாடுகளாகும். லெபனான் நாட்டுக்கு தெற்கே இஸ்ரேல் நாடு உள்ளது. இரு நாடுகளுக்கும் மேற்கே மத்திய தரைக்கடல் உள்ளது. இரண்டு நாடுகளும் நில எல்லை மற்றும் கடல் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன.
என்ன பிரச்சினை:
இஸ்ரேல் மற்றும் லெபனான் ஆகிய இரண்டு நாடுகளும் எல்லையை பகிர்ந்து கொள்வதில், தசாப்தங்களாக பிரச்னை நீடித்து வருகிறது . கடந்த 2011 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையேயான கடல் எல்லையில், மிகப்பெரிய எரிபொருள் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, இரண்டு நாடுகளும் எரிபொருள் வளத்திற்கு சொந்தம் கொண்டாடி வந்தன. இது இரண்டு நாடுகளுக்கிடையே மோதலை ஏற்படுத்தியது. கடந்த 10 ஆண்டுகளாக இரண்டு நாடுகளுக்கு இடையே ஏற்படும் மோதலை தீர்க்கும் வகையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வந்தன.
ஒப்பந்தம்:
இந்நிலையில், இரண்டு நாடுகளுக்கு இடையே மோதலை போக்கும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க மத்தியஸ்தம் செய்துள்ளது. இதன் மூலம் இரண்டு நாடுகளுக்கு இடையேயான கடல்வழி பிரச்சினைக்கு முடிவுக்கு வந்தது.
ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
- இரு நாடுகளும், பிரச்னைக்குரிய கடல் எல்லை பகுதியில், எரிபொருள் வளத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
- இரு நாடுகளுக்கும் இடையேயான கடல் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
ஒப்பந்தத்தின் தாக்கம்:
- இரு நாடுகளும் எரிபொருளை எடுத்து கொள்வதால், இரு நாடுகளும் ஆதாயம் பெறுகின்றன.
- பொருளாதார அடிப்படையில், இரு நாடுகளும், குறிப்பாக மிகவும் பொருளாதார சிக்கலில் இருக்கும் லெபனானுக்கு, இது பயனுள்ளதாக கருதப்படுகிறது.
- உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரின் காரணமாக கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்பகுதியில் எடுக்கப்படும் எரிபொருட்கள் பெரிதும், ஐரோப்பிய நாடுகளுக்கு உதவிகரமாக இருக்கும் என கருதப்படுகிறது.
நீடிக்கும் சிக்கல்:
இரு நாடுகளுக்கு இடையேயான கடல் எல்லை தீர்க்கப்பட்டதாக கருதப்பட்டாலும், நிலவழி எல்லை இன்னும் தீர்க்கப்படவில்லை.
ப்ளூ லைன் என்று அழைக்கப்படும் இரு நாடுகளுக்கு இடையேயான நிலவழி எல்லை மிகவும் சிக்கலானதாக கருதப்படுகிறது. இந்த எல்லை பிரச்சினை தீர்க்கப்பட்டால் மட்டுமே, இரு நாடுகளுக்கு இடையேயான முழுமையான பிரச்சினை தீர்க்கப்படும் என கூறப்படுகிறது.
Also Read: ஐநா பொது சபையில்...ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம்...இந்தியாவின் நிலைபாடு என்ன?