Hopshoots: கிலோ ரூ.85 ஆயிரத்துக்கு விற்கப்படும் உலகின் விலை உயர்ந்த காய்.... அப்படி என்ன இருக்கு இதுல!
நம் நாட்டில் ஒரு வேளைக்கு சமைப்பதற்காக இதனை வாங்குவதற்கு பதிலாக ஒருவர் பைக் அல்லது தங்க நகைகளை வாங்கி சொத்து சேர்த்து விடலாம் என்பது சோகமான விஷயம்!
இந்தியாவைப் பொருத்தவரை விலையுயர்ந்த உணவுப்பொருள் என வரும்போது நாம் பொதுவாக இமயமலையில் வளரும் காளான், குங்குமப்பூ, ட்ரை ஃப்ரூட்ஸ் (Dry fruits) பாதாம், பிஸ்தா உள்ளிட்ட பொருள்களைப் பற்றி சிந்திப்போம்.
ஆனால் இவற்றின் விலையை யெல்லாம் அசால்ட்டாக புறம் தள்ளி பல அடிகள் பாய்ந்து விலையை கேட்டதும் நம்மை கவலைக்குள்ளாக்கும் காய் ஒன்று உள்ளது.
ஹாப்ஷூட்ஸ்
ஐரோப்பிய நாடுகளில் மிகப் பிரபலமாக உள்ள "ஹாப்ஷூட்ஸ்" தான் அந்தக் காய். உலகின் மிக விலையுயர்ந்த காய்கறி என்று குறிப்பிடப்படும் இந்தக் காய் அதன் மருத்துவ குணங்களுக்காகவே மிகவும் பிரசித்தி.
ஒரு கிலோ ஹாப் ஷூட்ஸின் விலை தற்போதைக்கு இந்திய மதிப்பின்படி சுமார் 85,000 ரூபாய்! நம் நாட்டில் ஒரு வேளைக்கு சமைப்பதற்காக இதனை வாங்குவதற்கு பதிலாக ஒருவர் பைக் அல்லது தங்க நகைகளை வாங்கி சொத்து சேர்த்து விடலாம் என்பது சோகமான விஷயம்!
பொதுவாக இந்தக் காய் இந்தியாவில் பயிரிடப்படுவதில்லை. ஆனால் முதன்முதலாக இந்தக் காய் இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் நடவு செய்யப்பட்டன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏன் இவ்வளவு விலை?
இதன் விலை 85 ஆயிரம் சரி... ஆனால் எதற்காக இந்த விலை? விலைக்கான காரணம் தான் நம்மை இன்னும் ஆச்சரியப்படுத்தி கவலைக்குள்ளாக்குகிறது.
இந்தக் காயை அறுவடை செய்வதற்குள் ஒருவரது முதுகுத் தண்டு நொந்து நூடுல்ஸாகிவிடுமாம். இந்த ஒரே காரணத்தால் தான் ஹாப்ஷூட்ஸ் இவ்வளவு விலைக்கு விற்கப்படுகிறது என்கின்றனர் வணிகர்கள்.
ஹாப்ஷூட்ஸின் விலை அவற்றின் தரத்தைப் பொறுத்து மாறுபடும். உயர்ந்த விலை கொண்ட காய்கறி என்பதோடு இவை சந்தையில் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை.
ஹியூமுலஸ் லுபுலஸ் (Humulus lupulus) எனும் அறிவியல் பெயர் கொண்ட இந்தக் காய் ஒரு கொடியாக படரக் கூடிய தாவரமாகும்.
முன்னதாக ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட உலகின் விலையுயர்ந்த காய்கறி என கஞ்சா தாவரமே கருதப்பட்டது. தற்போது கஞ்சா செடியை ஓவர் டேக் செய்து ஹாப் ஷூட்ஸ் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கிறது
கார்டியன் ஊடக அறிக்கையின்படி, ஹாப்ஷூட்ஸ் அறுவடைக்கு தயாராக மூன்று ஆண்டுகள் பிடிக்கும். இந்தச் செடியை கைகளால் மட்டுமே அறுவடை செய்ய முடியும். இச்செடியின் சிறிய பச்சை நுனிகளைப் பறித்து அறுவடை செய்ய அதிக கவனம் தேவை. எனவே இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாது.
ஹாப்ஷூட்ஸின் ஆரோக்கிய நன்மைகள்
மருத்துவ ஆய்வுகளின்படி, இந்தக் காய்கறியானது காசநோய்க்கு எதிரான ஆன்டிபாயாட்டிக்களை உருவாக்குவதோடு, கவலை, தூக்கமின்மை, அமைதியின்மை, பதற்றம், உற்சாகம், கவனக்குறைவு-அதிக செயல்பாட்டுக் கோளாறு (ADHD) உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவும் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவில் ஹாப்ஷூட்கள் பயிரிடப்படாததால், அவற்றின் விலை இங்கு மிகவும் அதிகமாக உள்ளது. ஆனால், இமயமலையில் பயிரடப்படும் இதேபோன்ற விலை உயர்ந்த காய்கறியான குச்சி, இமயமலை அடிவாரத்தில் விளையும் காட்டுக் காளான் ஆகியவை கிலோ ரூ.30,000க்கு விற்பனை செய்யப்படுகின்றன.