அன்று இரவோடு இரவாக தப்பியோட்டம்! வேறுவழியின்றி மீண்டும் இலங்கை திரும்பும் கோத்தபய ராஜபக்ச!
அரசு தந்த எச்சரிக்கையை மீறி, வரும் 24-ம் தேதி இலங்கைக்குத் திரும்புகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன
மக்களின் அடி,உதைக்குப் பயந்து, இரவோடு இரவாக இலங்கையைவிட்டு தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச,அரசு தந்த எச்சரிக்கையை மீறி, வரும் 24-ம் தேதி இலங்கைக்குத் திரும்புகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தகவலை, ராஜபக்ச குடும்ப உறவினரும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க உறுதி செய்துள்ளார். தம்மிடம் தொலைபேசியில் பேசிய கோத்தபய ராஜபக்ச, வரும் 24-ம் தேதி கொழும்பு வரப்போவதாகத் தெரிவித்தார் என்று வீரதுங்க செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தப்பியோடிய ராஜபக்ச!
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்த இலங்கையில், நாட்டு மக்கள் அரசை எதிர்த்து தொடர் போராட்டங்ககளில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டங்களினால் மக்களுக்கு பயந்து அந்நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்ச வெளிநாட்டிற்கு தப்பிச்சென்று விட்டார்.
இலங்கை வரலாற்றில் இதுவரைகண்டிராத வகையில், முதன்முறையாக, வானளாவிய அதிகாரம் மிக்க ஜனாதிபதி பதவியில் இருக்கும் ஒருவர் , மக்கள் புரட்சிக்குப் பயந்து, அடி, உதை வாங்கிவிடுவோமோ என்ற நிலையில், நாட்டைவிட்டு இரவோடு இரவாக தப்பியோடிய நிகழ்வு என்றால் அது கோத்தபய ராஜபக்ச தப்பியோடிய விவகாரம்தான்.
(உதயங்க வீரதுங்க)
வெவ்வேறு நாடுகளுக்கு தப்பியோட்டம்
முதலில், மாலத்தீவுகளுக்கு குடும்பத்துடன் தப்பியோடினார் ராஜபக்ச. அங்கும் மக்கள் எதிர்ப்பு அதிகமாகவே, அங்கிருந்து சிங்கப்பூருக்கு அவரது வர்த்தக நண்பர்கள் உதவியுடன் சென்றார். அங்கும் அவருக்கு விசா நீட்டிப்பு கிடைக்கவில்லை. கோத்தபய ராஜபக்சவுக்கு, இலங்கை மக்களின் எதிர்ப்பு அதிகம் இருப்பதால், தாய்லாந்தில் வசிக்கும் இலங்கையர்களால், அவருக்கு சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், வெளியே நடமாடினால், கோத்தபய ராஜபக்சவுக்கு ஆபத்து இருப்பதாக அந் நாட்டு உளவுத்துறை அறிக்கை கூறியதாக வந்த தகவலை அடுத்து, வீட்டிற்குள்ளேயே ஒடுங்கி இருக்கவேண்டிய நிலை கோத்தபய ராஜபக்சவுக்கு வந்துவிட்டது. மேலும், செலவுக்கும் கைகொடுப்பதற்கான வழிகள் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வந்ததால், பெரும் யோசனைக்கு கோத்தபய தள்ளப்பட்டுள்ளார். விடுமுறை போல் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தவருக்கு, கிட்டத்தட்ட வீட்டுச்சிறை போல் இருந்ததால், வேறுவழியின்றி, இலங்கைக்கு திரும்பிச் சென்றுவிடலாம் என கோத்தபய ராஜபக்சவுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. ஏனெனில்,நீதிமன்ற உத்தரவால், தற்போது நாட்டை விட்டு வெளியேற முடியாமல், அங்கேயே தங்கியிருக்கும் மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச போல், தாங்களும் அங்கேயே இருக்கலாம் என கோத்தபய ராஜபச்சவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட கோத்தபய ராஜபக்ச, வரும் 24-ம் தேதி இலங்கை திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோத்தபய ராஜபக்ச நாடு திரும்புவதால், மீண்டும் மக்கள் புரட்சி வெடித்துவிடக்கூடாது என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட 100 நாட்கள் மக்களின் தொடர் புரட்சியால், இலங்கையே தலைகீழ் ஆனது. இந்தச் சூழலில், கோத்தபய-வின் வருகை மீண்டும் மக்களை வீதிக்கு அழைத்து வந்துவிடக்கூடாது என்பது தொடர்பாக, தற்போது ஆலோசனைக்கூட்டங்கள் நடைபெற்று வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரவோடு இரவாக தப்பியோட்டம்?
தம்முடைய அனைத்து வகை ராஜதந்திரங்களையும் பயன்படுத்தி தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங் சென்றடைந்தார். அங்கு,நிம்மதியாக சில காலம் தங்கிவிட்டு, வேறு எங்காவது சென்றுவிடலாம் என நம்பியிருந்தவருக்கு பெரும் ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது. ஏனெனில், தாய்நாட்டிற்கு தற்போது கோத்தபய திரும்புவது சரியாக இருக்காது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிப்படையாகவே அறிவித்தார். இதையடுத்து, தாய்லாந்திலேயே நிம்மதியாக இருக்கலாம் என நினைத்தவருக்கு,பெரும் இடியாக அமைந்தது அந்நாட்டு உளவுத்துறையின் அறிக்கை.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
கோத்தபய நாடு திரும்பினால், அவருக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் இந்தக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாம். எது எப்படி இருந்தாலும், அதிகாரம் மிக்க பதவியில் இருந்த கோத்தபய ராஜபக்ச, இரவோடு இரவாக தப்பியோடி சம்பவம், இலங்கையில் வரலாற்றில் நடைபெற்ற தரமான சம்பவங்களில் ஒன்று என்றால் மிகையில்லை. அதுமட்டுமல்ல, அரசியலில் எதுவும் எப்போதும் நடக்கலாம் என்பதை மீண்டும் நிருபித்தது மட்டுமின்றி, மக்கள் புரட்சி வெடித்தால், எப்பேர்ப்பட்ட அதிகாரமும் தூக்கி எறியப்படும் என்பதையும் உலகிற்கு மீண்டும் ஒரு முறை எடுத்துக்காட்டியது இலங்கையின் தரமான சம்பவம்.