பிரதமர் இம்ரான் கானுக்கு எதிர்ப்பு: பாகிஸ்தான் அரசியலில் என்ன நடக்கிறது?
அமர்வில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டாலும், ஏப்ரல் 4 வரை வாக்கெடுப்பு நடத்தப்படாமல் போகலாம் என்று உள்துறை அமைச்சர் ஷேக் ரஷித் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் நாடாளுமன்றம் நேற்று கூடியது. ஆனால் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய சபாநாயகர் அனுமதித்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. வெள்ளிக்கிழமை தொடங்கிய அமர்வு பின்னர் இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. சபாநாயகர் அசாத் கெய்சரை எதிர்க்கட்சிகள் ஒரு இரங்கல் தீர்மானத்தின் மீது விமர்சனம் செய்திருந்தன. திங்கள்கிழமை அமர்வில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டாலும், ஏப்ரல் 4 வரை வாக்கெடுப்பு நடத்தப்படாமல் போகலாம் என்று உள்துறை அமைச்சர் ஷேக் ரஷித் தெரிவித்துள்ளார்.
நடைமுறைகள் முன்வைக்கப்பட்ட பிறகு, மூன்று நாட்களுக்கு முன்னதாகவே வாக்களிக்கப்பட வேண்டும் என்றும், ஏழு நாட்களுக்குப் பிறகு வாக்களிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் அரசின் சட்டம் சொல்கிறது. இந்த கால அவகாசத்தை இம்ரான்கான் பயன்படுத்திக் கொள்ள சாத்தியம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த காலகட்டத்தில் கடந்த சில வாரங்களாக அவரை விட்டு விலகிய ஆதரவாளர்களை அவரால் திரும்பக் கொண்டு வர முடியும் அல்லது தவிர்க்க முடியாத இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தள்ளிவைக்க முடியும். அவரது அரசாங்கத்தில் உள்ள சிலர், 2023ல் தேர்தல் வருவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னதாகவே, ஒரு திடீர் தேர்தலை நடத்துமாறு அவரை வற்புறுத்துகின்றனர்.
ஆளுங்கட்சியின் அதிருப்தியாளர்கள் சிலர் தெற்கு பஞ்சாபைச் சேர்ந்தவர்கள், அதே பிராந்தியத்தைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, தெற்கு பஞ்சாப்பை தனி மாகாணமாக உருவாக்குவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து பிரித்து, தெற்கு பஞ்சாப் மாகாணத்தை உருவாக்குவது, நீண்டகால பிராந்திய கோரிக்கையாக இருந்து வருகிறது, ஆனால் பஞ்சாபி மேலாதிக்க அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் இது ஒருபோதும் தீவிரமாக விவாதிக்கப்படுவதில்லை.
இதுவரை அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் கூட்டணிக் கட்சிகளின் 342 உறுப்பினர்கள் உள்ளனர். இம்ரானின் ஆளும் கூட்டணிக்கு 179 உறுப்பினர்கள் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை, அந்த கூட்டணியில் ஜம்ஹூரி வதன் கட்சி விலகியதை அடுத்து அது 178 ஆக குறைந்தது.
இம்ரான் மற்றும் பிடிஐ மேலாளர்கள் மற்ற கூட்டணிக் கட்சிகளான PML-Q, பலூசிஸ்தான் அவாமி கட்சி (BAP) ஆகிய கட்சிகள் இடையே பேச்சுவார்த்தைக்கு முயன்று வருகின்றனர். அவர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டணிக் கட்சிகளில் குறைந்தது இரண்டு கட்சிகளாவது இராணுவப் பின்புலம் உடையது 2018ம் ஆண்டுக்கான தேர்தலுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. PML(Q) கட்சி PML(N) இல் இருந்து அப்போதைய அதிபர் முஷாரப்பால் பிரிக்கப்பட்டது.
இந்தக் கட்சிகள் இன்னும் தங்கள் முடிவை இம்ரான் கானிடம் தெரிவிக்கவில்லை. ஆனால், இவை அவருக்கு ஆதரவாக இருந்தாலும் இம்ரானின் கட்சிக்குள்ளேயே இருக்கும் எதிர்ப்பை தீர்க்க அவர் முடிவெடுத்தாக வேண்டிய இக்கட்டான சூழல் அங்கே நிலவி வருகிறது.