North Korea: வடகொரிய அதிபர் மகள் அணிந்த ஜாக்கெட்...! வாயைப் பிளக்க வைக்கும் விலை..!
ஃபேஷன் அவுட்லெட்டின் இணையதளத்தின்படி, இந்த ஜாக்கெட் அமெரிக்காவில் $2,800 விலையில் விற்கப்படுகிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில், சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் என்று கூறப்படுகிறது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜு ஏ, தனது தந்தையுடன் கடந்த வாரம் ஏவுகணை ஏவலில் கலந்து கொண்டபோது, அவர் உயர்தர பிரெஞ்சு பேஷன் லேபிள் கிறிஸ்டியன் டியோர் தயாரித்த ஜாக்கெட்டை அணிந்திருந்ததாக அதன் விலையுடன் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
விலையுயர்ந்த ஜாக்கெட்
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜு ஏ கடந்த ஆண்டு ஐசிபிஎம் ஏவுகணை சோதனை தளத்தில் முதன்முதலில் வெளியே காணப்பட்டதிலிருந்து அதிகமாக செய்திகளில் பேசப்படும் ஒருவராக இருந்து வருகிறார். சமீபத்தில் கூட அவரது பெயரை வட கொரியாவில் யாரும் வைக்கக்கூடாது என்றும், ஏற்கனவே வைத்திருப்பவர்கள் மாற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.
அதன் மூலம் அவரை அவரது அரசியல் வாரிசாக அறிவிக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்தன. கிம்மின் மகள் ஒரு ஃபேஷன் கலைஞராக இருக்கலாம் என்ற ஊகங்களை ஊடக அறிக்கைகள் கூறியதையடுத்து, தனது தந்தையுடன் கடந்த வாரம் மற்றொரு ஏவுகணை ஏவலில் கலந்து கொண்டபோது, அவர் உயர்தர பிரெஞ்சு பேஷன் லேபிள் கிறிஸ்டியன் டியோர் தயாரித்த ஜாக்கெட்டை அணிந்திருந்ததாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பகுப்பாய்வு செய்த தென் கொரிய ஊடகம்
கிம் ஜு ஏ, தனது தந்தையுடன் கடந்த வாரம் மற்றொரு ஏவுகணை ஏவலில் கலந்து கொண்ட நிலையில், அப்போது வட கொரிய அரசு ஊடகம் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் அவர் கருப்பு நிற ஜாக்கெட்டை அணிந்திருந்தார். தென் கொரிய ஊடகங்கள், டிவி சோசன் என்ற செய்தி நிறுவனம், இந்த ஜாக்கெட் தனித்துவமான ஒன்று என்று கருதி அதனை கண்டுபிடிக்க முயன்று, அது ஃபேஷன் ஹவுஸ் கிறிஸ்டியன் டியோர் நிறுவனத்தால், விற்கப்படும் பிரீமியம் தயாரிப்பு என்று குறிப்பிட்டுள்ளது.
"கடந்த 16 ஆம் தேதி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவுவதைக் காணும் போது வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் மகள் கிம் ஜு ஏ அணிந்திருந்த கோட், பிரெஞ்சு சொகுசு பிராண்டான கிறிஸ்டியன் டியரின் தயாரிப்பு என்று பகுப்பாய்வு செய்யப்பட்டது" என்று அந்த வெளியீடு குறிப்பிட்டுள்ளது.
இரண்டு லட்சத்திற்கும் மேல்
ஃபேஷன் அவுட்லெட்டின் இணையதளத்தின்படி, இந்த ஜாக்கெட் அமெரிக்காவில் $2,800 விலையில் விற்கப்படுகிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில், சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் என்று கூறப்படுகிறது. பொருளாதாரத் தடைகள் மற்றும் வட கொரியாவில் அத்தகைய பிராண்டுகள் கிடைக்காத கடுமையான அழுத்தத்தில் உள்ள நிலையில், கிம் ஜூ ஏ டிசைனர் ஜாக்கெட்டை அணிந்திருப்பது பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஜூ ஏ கிம்மின் அறியப்பட்ட மூன்று குழந்தைகளில் ஒருவர். கடந்த ஆண்டு நவம்பரில், பலரை ஆச்சரியப்படுத்தும் வகையில், கிம் அவரை பியாங்யாங் சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஆய்வு செய்ய அழைத்துச் சென்றார்.
நாட்டு மக்கள் அதிருப்தி
கிம் தனது மகளுடன் பகிரங்கமாகச் செல்வது போன்ற படங்கள் விரைவாகப் பரவி, வட கொரியத் தலைவர் அவரைத் தனது வாரிசாகத் தயார் செய்கிறார் என்று பலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், பலர் அவரை அங்கீகரிக்கவில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர் "போஷாக்குடனும் வெள்ளையாகவும்" தோற்றமளிப்பதால் வட கொரிய மக்கள் அவர் மீது வெறுப்படைந்ததாக சமீபத்திய அறிக்கைகள் கூறுகின்றன. ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவைப் பெற முடியாமல் பட்டினியால் வாடும் பொதுமக்களை அவரது தோற்றம் கோபப்படுத்துகிறது என்று கூறப்படுகிறது. தற்போது இந்த விலை உயர்ந்த உடையையும் அணிந்துள்ளது அவர் மீது மேலும் கோபத்தை அதிகரிக்க செய்துள்ளது.