(Source: ECI/ABP News/ABP Majha)
EXCLUSIVE: "தமிழர்களுக்கு இது பாதிப்பை மட்டுமே தரும்.." ABP NADU-வுக்கு இலங்கை கேபினட் அமைச்சர் பேட்டி!
பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா..? இல்லையா? பழ. நெடுமாறன் தெரிவித்தது உண்மைதானா? என்பது குறித்து இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை ஏபிபி நாடு செய்தியாளரால் தொடர்புகொண்டு கேட்டறிந்தோம்.
பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் செய்தியாளர் சந்திப்பில் நேற்று தெரிவித்தார். மேலும், இது பிரபாகரன் குடும்பத்தினர் தெரிவித்த தகவல் என்றும் அவர் விரைவில் வெளியே வருவார் என்றும் கூறியுள்ளார். பிரபாகரன் குடும்பத்தினர் என்னுடன் தொடர்பில் இருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, ”சர்வதேச அரசியல் சூழலும், இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்த வெடித்துச் சிதறியுள்ள சிங்கள மக்களின் போராட்டமும், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை தற்போது உருவாகியுள்ளது. இந்த சூழலில் தமிழீழ தலைவர் நலமுடன் இருக்கிறார் என்பதை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்” இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், அவர் “ இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்தியாவிற்கு எதிராக சீனா செயல்படுகிறது இதனை தடுக்க முற்பட வேண்டும். இது பிரபாகரன் குடும்பத்தினர் தெரிவித்த தகவல் என்றும் அவர் விரைவில் வெளியே வருவார். பிரபாகரன் குடும்பத்தினர் என்னுடன் தொடர்பில் இருக்கின்றனர். பிரபாகரன் உள்ள இடத்தை தற்போது கூற முடியாது. பிரபாகரனின் அனுமதியுடன் இதனை வெளிப்படுத்துகிறேன் என்றும்” அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில், பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா..? இல்லையா? பழ. நெடுமாறன் தெரிவித்தது உண்மை தானா? என்பது குறித்து இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை ஏபிபி நாடு செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்டறிந்தோம். அப்போது அவர் தெரிவித்ததாவது, “ பழ. நெடுமாறனின் இந்த கருத்து குறித்து அவரிடமிருந்துதான் கேட்டு தெரிய வேண்டும். அவருடைய சுயலாபத்துக்காக இந்த கருத்தை தெரிவித்து இருக்கலாம். எனக்கு தெரிந்த வகையில், பிரபாகரன் இந்த உலகத்தில் இல்லை. அப்படி அவர் இறந்து விட்டார் என்று பொய் சொல்ல இலங்கை அரங்காத்திற்கு அவசியம் இல்லை.
இதுவரை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா ? என்ற கேள்வி எழவுமில்லை. அதை நிரூபிக்கம் அளவிற்கு இலங்கை அரசுக்கு தேவையும் இருந்ததும் இல்லை. இதுமாதிரியான கருத்துகள், இதுமாதிரியான செயல்பாடுகள் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எந்த மாதிரியான பயனையும் தராது. இதனால் அந்த மக்களுக்கு பாதிப்பு மட்டும் ஏற்படும்.” என்று தெரிவித்தார்.