சீன பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா... மீம் போட்டு கலாய்த்த எலான் மஸ்க்..!
சீனாவின் உளவு பலூன் என சொல்லப்பட்ட ஒன்றை அமெரிக்காவின் அணு ஆயுத ஏவுதளத்திற்கு மேலே பறந்தது பெரிய சர்ச்சைக்கு உள்ளானது.
சீனாவின் உளவு பலூன் என சொல்லப்பட்ட ஒன்றை அமெரிக்காவின் அணு ஆயுத ஏவுதளத்திற்கு மேலே பறந்தது பெரிய சர்ச்சைக்கு உள்ளானது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கன் சீனாவிற்கு செல்வதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த சர்ச்சை வெடித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் அணு ஆயுத ஏவுதளத்தின் மீது சீனாவின் உளவு பலூன் காணப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு அமைப்பு குறிப்பிடுகையில், "இந்த உளவு பலூனை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இந்த உளவு பலூன் அளவில் மூன்று பேருந்துகளை ஒன்றாக இணைத்ததுபோல் இருக்கின்றது.
அணு ஆயுத ஏவுதளத்தின் மீது பறக்கும் இந்த உளவு பலூனால் எவ்வித தகவலும் பெறமுடியாத படிக்கு பாதுகாப்பு வளையங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன" என்று கூறியிருந்தது.
சீன உளவு பலூன் அணு ஆயுத ஏவுதளத்தின் மீது பறந்தது தொடர்பாக அதிபர் ஜோ பைடனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு முழு விளக்கமும் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையின் பேரில், உடனடியாக அந்த பலூனை சுட்டு வீழ்த்த அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார்.
ஆனால், அந்த பலூனை சுட்டு வீழ்த்தினால் பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக பெண்டகன் (அமெரிக்க பாதுகாப்புத்துறை) எச்சரித்தது. இதன் காரணமாக தான், அந்த பலூன் சுட்டு வீழ்த்த முடியாத நிலை இருந்தது.
வானில் பறக்கும் அந்த பலூன் ஆனது சுமார் 3 முழு நீள பேருந்துகளின் அளவிற்கு வடிவத்தில் பெரியது. அதில், அதிக எடையுடன் கூடிய இயந்திரங்களுடன், வழிகாட்டுதல் மற்றும் தகவல்களைச் சேகரிப்பதற்கான மின்னணுவியல், பெரிய சோலார் பேனல்களையும் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
மேலும் வானில் சுமார் 80 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அமெரிக்காவின் கைவசம் உள்ள அதிநவீன போர் விமானங்கள் கூட அதிகபட்சமாக 65 ஆயிரம் அடி உயரத்திற்கு தான் பறக்க முடியும்.
அதனால் அந்த பலூனை சுட்டு வீழ்த்துவது கடினமாக இருந்தது. இருப்பினும், அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக சீன பலூன் நேற்று சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்நிலையில், உலகின் முதன்மை பணக்காரரான எலான் மஸ்க், இந்த சம்பவத்தை குறிப்பிட்டு மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார். 2009ஆம் ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான 'Up' இல் இடம்பெற்ற பறக்கும் வீடு, அமெரிக்க ராணுவம் சுட்டதால் வெடித்து சிதறுவது போல பதிவிட்டு கலாய்த்துள்ளார்.
அமெரிக்க வான்பரப்புக்குள் பறந்தது உளவு பலூன் அல்ல என்றும், அது வானிலை ஆராய்ச்சிக்காக பறக்க விடப்பட்ட ஆகாய கப்பல் என்றும் சீனா விளக்கம் அளித்திருந்தது.
அதில், மேற்கில் இருந்து வீசிய காற்று மற்றும் குறைவான சுய இயங்கு தன்மையால், ஆகாய கப்பல் திசை மாறி சென்று விட்டது. அது அமெரிக்க வான் பரப்புக்குள் தவறுதலாக நுழைந்ததற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டது.