Tesla Flying Car: இனி கார்ல பறக்கலாம்; அட நிஜமாவேதாங்க.! இந்த ஆண்டு இறுதியில் டெமோ; எலானின் எக்சைட்டிங் அறிவிப்பு
இந்த ஆண்டு இறுதிக்குள் டெஸ்லா பறக்கும் காரின் முன்மாதிரியை வெளியிடத் தயாராகி வருவதாகவும், திட்டமிடப்பட்ட டெமோ நிகழ்வு மறக்க முடியாததாக இருக்கும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், இந்த ஆண்டு இறுதிக்குள் பறக்கும் கார் முன்மாதிரியை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இது வரலாற்றில் மறக்க முடியாத தயாரிப்பு வெளியீடாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அக்கப்போராகிவரும் போக்குவரத்து
உலகெங்கிலும், வாகனங்களின் பெருக்கத்தால், போக்குவரத்து என்பது இனிமையான அனுபவத்திற்கு பதிலாக, இம்சையான அனுபவமாக மாறி வருகிறது. எங்கு போனாலும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, பயணங்கள் தாமதமாவது தற்போது வாடிக்கையாகிவிட்டது.
என்னதான் வாகனங்கள் நவீனமயமாகிவிட்டாலும், நெரிசலால் அவற்றின் முழுமையான பயனை பெற முடியாமல் போய்விடுகிறது. இதனால், ஹாலிவுட் திரைப்படங்களில் வருவதுபோல், கார்கள் பறந்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் நினைப்பதுண்டு. ஆனால், இது விரைவில் நனவாகப்போகிறது என்பதுதான் உண்மை. ஆம், உலகின் பல கார் நிறுவனங்கள், பறக்கும் கார்களை வடிவமைப்பதில் தற்போது ஈடுபட்டு வருகின்றன. அதில் முன்னணியில் இருப்பது டெஸ்லா தான். ஆம், அது குறித்துதான் தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார், டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க்.
“இந்த ஆண்டு இறுதிக்குள் பறக்கும் கார் முன்னோட்டம்“
கடந்த 2014-ம் ஆண்டு முதல் பறக்கும் கார்களை பற்றி பேசி வரும் டெஸ்லா கார் நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க், தற்போது உண்மையாகவே அது குறித்து ஒரு அற்புதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, 2025-ம் ஆண்டின் இறுதிக்குள் பறக்கும் காரை அறிமுகம் செய்து, அதன் முன்னோட்டத்தை(Demo) காண்பிக்க உள்ளதாக பாட்கேஸ்ட் ஒன்றில் பேசிய அவர் கூறியுள்ளார்.
மேலும், அவர் நடத்தவிருக்கும் அந்த முன்னோட்ட நிகழ்ச்சி, வரலாற்றிலேயே மறக்க முடியாக ஒரு நிகழ்வாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அதோடு, அந்த கார்களுக்கு இறக்கை இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க், கார் வெளியாவதற்கு முன்னர் அது பற்றிய எந்த தகவலையும் வெளியிட முடியாது என்றும், ஆனாலும், இதுவரை நடந்த வெளியீடுகளிலேயே அது ஒரு மறக்கமுடியாத தயாரிப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
அதோடு, எல்லா ஜேம்ஸ் பாண்ட் கார்களையும் எடுத்து இணைந்ததால், இந்த தயாரிப்பு அவைகளைவிட கிரேஸியாக இருக்கும் என்றும் எலான் மஸ்க் வேடிக்கையாக தெரிவித்துள்ளார்.
அவரது இந்த அறிவிப்பை அடுத்து, பறக்கும் காரை பார்க்கும் ஆர்வம் உலக அளவில் ஏற்பட்டுள்ளது. இதுவரை படங்களில் மட்டுமே பார்த்துள்ள பறக்கும் கார்களை நிஜத்திலும் காணப் போகிறோம் என்பதை நினைக்கும் போதே, எலான் மஸ்க் சொன்னது போல் நிச்சயம் அது மறக்க முடியாத ஒரு அனுபவமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.






















