Trump Vs China Tariff: நவம்பர் 1-ல் இருந்து வரி 155% ஆகிடும் ஜாக்கிரதை; சீனாவை மீண்டும் சீண்டிய ட்ரம்ப்
தான் கேட்கும் ஒப்பந்தத்தை சீனா மேற்கொள்ளவில்லை என்றால், நவம்பர் 1-ம் தேதியிலிருந்து அந்நாட்டிற்கான வரி 155 சதவீதம் ஆகிவிடும் என்று ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவிற்கு நவம்பர் 1-ம் தேதி முதல் 100 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என ஏற்கனவே ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், ஒருபுறம் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தான் கேட்டும் ஒப்பந்தத்தை சீனா மேற்கொள்ள வில்லை என்றால், நவம்பர் 1-ம் தேதியிலிருந்து சீனாவிற்கு மொத்த வரி 155 சதவீதம் ஆகிவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளர்.
ட்ரம்ப் கூறியது என்ன.?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பரஸ்பர வரிகள் குறித்து அவர்கள் பேசிய நிலையில், முக்கிய கனிமங்களை வாங்குவது தொடர்பாக ஆஸ்திரேலியாவுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்துகொண்டது.
இதைத் தொடர்ந்து பேசிய ட்ரம்ப், சீனா குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். சீனாவுடன் அமெரிக்கா மிகவும் மரியாதையாக நடந்து கொண்டுள்ளதாக கூறிய அவர், அதே சமயம், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை தனது நிர்வாகம் பொறுத்துக் கொள்ளாது என கூறினார்.
“சீனாவிற்கு வரி 155 சதவீதம் ஆகிவிடும்“
மேலும், தற்போது சீனா 55 சதவீத வரிகளை செலுத்தி வருவதாகவும், சீன அதிபர் ஷி ஜின்பிங், அமெரிக்கா உடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றால், நவம்பர் 1-ம் தேதி முதல் சீனா 155 சதவீதம் வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், அமெரிக்கா புதிய ஏற்றுமதி தடைகளை விதிக்கும் என்றும் ட்ரம்ப் கூறினார். அமெரிக்கா-சீனா இடையே மலேசியாவில் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், சீனா பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
“இனி அமெரிக்காவை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியாது“
அதோடு, கடந்த காலங்களில் பல நாடுகள் அமெரிக்காவை சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக குற்றம்சாட்டிய அவர், அந்த சகாப்தம் முடிந்துவிட்டதாகவும், இனிமேல் யாராலும் அமெரிக்காவை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியாது என்றும் திட்டவட்டமாக கூறினார் ட்ரம்ப்.
சமீபத்தில், அமெரிக்காவிடமிருந்து சீனா சோயாபீன் வாங்கவில்லை என்று குற்றம்சாட்டியிருந்த ட்ரம்ப், சீனாவை கடுமையாக சாடியிருந்தார். அப்போது தான், 100 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
ஏற்கனவே, தான் பதவியேற்ற பிறகு பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்த ட்ரம்ப், சீனாவிற்கு அதிகபட்சமான வரிகளை விதித்தார். சீனாவும் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வரிகளை விதித்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான வரிகள் 100 சதவீதத்தை தாண்டி சென்று கொண்டிருந்தது.
அதன் பின்னர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரிகள் குறைக்கப்பட்டன. ஆனால், சமீபத்தில் சீனாவை மீண்டும் சீண்டி வரும் ட்ரம்ப், தற்போது இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



















