Xi Jinping Tour: ட்ரம்ப்புக்கு டாட்டா.. சீனா பலே பிளான்.. தென்கிழக்கு ஆசிய நாடுகளை வளைக்கும் ஷி ஜின்பிங்...
ஒரு பக்கம் ட்ரம்ப்புடன் மோதலில் ஈடுபட்டு வரும் சீனா, மறுபக்கம் தென்கிழக்காசிய நாடுகளை தன் பக்கமாக வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தகப் போர் உச்சத்தில் இருக்கும் நிலையில், தங்கள் நாட்டின் வர்த்தகத்திற்கு வலு சேர்க்கும் விதமாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளை வளைத்துப்போடும் முயற்சியில் இறங்கியுள்ளார், சீன அதிபர் ஷி ஜின்பிங். அதன் ஒரு பகுதியாக இன்று மலேசியா சென்ற அவருக்கு உற்சாக வரறேப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா - சீனா இடையே உச்சகட்ட வர்த்தகப் போர்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பால், சீனாவிற்கு 34 சதவீத வரி விதிக்கப்பட்டது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சீனாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்கள் அனைத்திற்கும் 34% வரியை விதித்தது சீனா. மேலும், பல அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் வர்த்தகம் செய்ய கட்டுப்பாடுகளையும், சில நிறுவனங்களுக்கு தடையையும் விதித்தது.
இதைத் தொடர்ந்து, சீனா அறிவித்த வரியை ஏப்ரல் 8-க்குள் திரும்பப்பெறாவிட்டால், அந்நாட்டிற்கு 50% கூடுதல் வரி விதிக்கப்படும் எனவும், அந்நாட்டுடனான பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டு, மற்ற நாடுகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்கப்படும் எனவும் ட்ரம்ப் எச்சரித்தார். ஆனாலும் அசராத சீனா, ட்ரம்ப் கூடுதல் வரியை விதித்தால், தாங்களும் அதற்கு பதில் வரி விதிப்போம் என எச்சரித்தது.
இதையடுத்து, ட்ரம்ப் உத்தரவுப்படி, சீனாவிற்கான வரி 104%-ஆக அதிகரித்தது. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கான வரியை 84%-ஆக உயர்த்தியது சீனா. இதைத் தொடர்ந்து, சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அந்நாட்டிற்கான வரியை 125 சதவீதமாக உயர்த்தினார் ட்ரம்ப். அதோடு, மற்ற நாடுகளுக்கான வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்ததுடன், சீனாவை தவிர மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கும் எனவும் அறிவித்தார். இந்நிலையில், அமெரிக்காவின் செயல்களுக்கு அஞ்ச மாட்டோம் என்றும், தாங்களும் வரியை மேலும் உயர்த்துவோம் என்றும் சீனா அறிவித்தது.
இதையடுத்து, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 145 சதவீதமாக உயர்த்தி அறிவித்தார் ட்ரம்ப். இதைத் தொடர்ந்து, சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கான வரிகளை 125 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. மேலும், இது உலகளாவிய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சிக்கும் காரணமாகியுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளை வளைக்க சீன அதிபர் டூர்
இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், சீனா பலே பிளான் ஒன்றை போட்டுள்ளது. அதன்படி, ட்ரம்ப்பின் வரிகளால் ஏற்படும் இழப்புகளை சமாளிக்கும் வகையில், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான தனது வர்த்தகத்தை அதிகரிக்கும் வகையில், சீன அதிபர் ஷி ஜின்பிங் பல்வேறு நாடுகளுக்கு நேரிலேயே சென்று, அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, ஏற்கனவே வியட்நாமிற்கு சென்ற அவர், இன்று மலேசியாவிற்கு சென்றுள்ளார். அங்கு, தங்க குவிமாடம் கொண்ட இஸ்தானா அரண்மனையில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை, மலேசிய மன்னர் சுல்தான் இப்ராஹிம் வரவேற்றார். மலேசிய அரச இசைக்குழுவின் இசையுடன், அவருக்கு சிகப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
மன்னருடனான பேச்சுவாத்த்தைக்குப்பின், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமையும் சந்திக்க உள்ளார் சீன அதிபர். இருவருடனான பேச்சுவார்த்தையின்போது, இரு நாடுகளுக்குமிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக, மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அமெரிக்கா அதிகப்படியான வரிகளை விதித்துள்ள நிலையில், அந்நாடுகளின் நம்பிக்கைக்குரிய வர்த்தக நண்பனாகும் முயற்சியில் சீனா தற்போது இறங்கியுள்ளது. இதனால், ட்ரம்ப்பின் வரிகள் பாதிப்பை ஏற்படுத்தினாலும், அதை சமாளிக்க இந்த நாடுகளுடனான கூடுதல் வர்த்தகம் உதவும் என சீனா நம்புகிறது.
மலேசிய பயணத்தை முடித்துக்கொண்டபின், சீன அதிபர் ஷி ஜின்பிங், அடுத்ததாக கம்போடியா செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.





















